கிழக்கில் தமிழ் தேசியத்தினை கொண்டு செயற்படும் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும்- கிழக்கு பல்கலை மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்..!

கிழக்கில் தமிழர்கள் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையை கருத்தில்கொண்டு தமிழ் தேசியத்தினைக்கொண்டு செயற்படும் கட்சிகளுக்கு வாக்களிக்கவேண்டும் என கிழக்கு பல்கலைக் கழகத்தின் கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்று தமிழர்களின் வாக்குகளைப்பிரிப்பதற்கு பலர் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் சிந்தித்து தமது வாக்குகளை பதிவுசெய்யவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோன்று தமிழ் தேசியத்தின் அடிப்படையில் செயற்படும் கட்சிகள் தங்களுக்குள் வேறுபாடுகளை மறந்து தமிழ் தேசியத்திற்கான வாக்குகளைப்பெற்றுக்கொள்ளும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீடத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் விக்னேஸ்வரன் கஜரூபன்,

எதிர்வரும் பொதுத்தேர்தலானது வடகிழக்கு தமிழ் மக்களைப்பொறுத்த வரையில் ஒரு சவால்மிக்க தேர்தலாக காணப்படுகின்றது.இன்று வடகிழக்கில் தமிழ் தேசிய கட்சிகள் பலவாக பிளவுபட்டு நிற்கின்றது.

அதேபோன்று பல சுயேட்சைக்குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் குழப்ப நிலையிலிருக்கும் இந்த சூழலில் தமிழ் மக்கள் அணியாக திரண்டு தமிழ் மக்கள் தமிழ் தேசியம் சார்ந்துசெயற்படும் கட்சிகளை ஆதரிக்கவேண்டும்.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய அரசியல் மிகவும் சவாலானதாக மாறியுள்ளது.இன்று அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல்போகும் சூழ்நிலையேற்பட்டுள்ளது.இதனை உணர்ந்து இப்பகுதியிலும் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதுடன் தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் அரசியல் கட்சிகளுக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஆதரவு என்றும் இருக்கும்.

பாராளுமன்ற தேர்தலையும் ஜனாதிபதி தேர்தலையும் வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் இளைஞர்கள் வேறுபடுத்திபார்க்கவேண்டும்.ஜனாதிபதியாக பெரும்பான்மை இனத்தவர் ஒருவரே சூழ்நிலை இந்த நாட்டில் உள்ளது.தமிழர்கள் இந்த நாட்டில் ஜனாதிபதியாக வரக்கூடிய சூழல் இருக்காது.

இன்று வடகிழக்கில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தி என்ற கோசம் எழுந்துள்ளதை காணமுடிகின்றது.தேசிய மக்கள் சக்தியின் வரலாறை கற்கவேண்டிய சூழ்நிலையில் நாங்கள் அனைவரும் இருக்கின்றோம்.

பாராளுமன்ற தேர்தலானது எமது இனத்தின் அடையாளத்தினையும் இனத்தின் சுயநிர்ணய உரிமையினையும் பாராளுமன்றத்திற்கு எடுத்துச்செல்லவேண்டும். வடகிழக்கில் உள்ள இளைஞர்கள் தேசிய மக்கள் சக்திக்கு பின்னால் செல்வதை விடுத்து தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளில் உள்ள ஆளுமையானவர்களை தெரிவுசெய்து பாராளுமன்றம் அனுப்புவதற்கானசெயற்றிட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.

தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளையும் கோட்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளும் நிலைமைகள் வடகிழக்கு இளைஞாகள் மத்தியில் ஏற்பட்டுள்ளமையானது தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்திற்கு ஆபத்தானது என கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீடத்தின் மாணவர் ஒன்றிய செயலாளர் துரைநாயகம் பிரதீபன் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தல் சிறுபான்மை மக்களின் அரசியல் இருப்பினையும் அவர்களின் அபிலாசைகளை தக்கவைக்கும் ஒரு களமாகவே நோக்கவேண்டியுள்ளது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *