
மட்டக்களப்பில் தாக்கப்பட்ட ஊடகவியலாளரை வைத்தியாசாலையில் சென்று பார்வையிட்டுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை கோரியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளரை நானும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் சந்தித்திருந்தோம்.
மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் ஊடகவியலாளர் ஓருவர் தாக்கப்பட்ட நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பினை சேர்ந்த லட்சுமனன் தேவ பிரதீபன் என்ற ஊடகவியலாளரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேருந்து நிலையம் அகற்றுவது தொடர்பாக வந்தாறுமூலை பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது கிழக்கு பல்கழைக்கழகத்தில் பணிபுரியும் பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடாத்தியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் பஸ்தரிப்பு நிலையம் ஒன்று அகற்றப்பட்டது தொடர்பில் அந்த பஸ்தரப்பு நிலையத்தினை அமைத்தவர்களின் உறவினர்கள் குறித்த பகுதியில் போராட்டம் நடாத்தியுள்ளனர்.
இந்த நிலையில் அப்பகுதிக்கு வந்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் ஆதரவாளர்கள் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.
இதன்போது அப்பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளரான லட்சுமனன் தேவ பிரதீபன் மீது அங்கிருந்த பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் தாக்குதல் நடாத்தியுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் ஆதரவாளர்களின் ஆதரவுடனேயே தன்மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாக ஊடகவியலாளர் லட்சுமனன் தேவ பிரதீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சுயாதீனமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.- என்றார்