
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு நாட்டில் உடனடியாக அபிவிருத்தி ஏற்பட வேண்டும். அபிவிருத்தி இல்லாமல் வேலைவாய்ப்புகளை வழங்க முடியாது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கிரம – கட்டுவன பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கம் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் முழு நாட்டிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது.
வடக்கு, தெற்கே, கிழக்கு அல்லது மேற்கு என அனைத்து மாகாணங்களின் அபிவிருத்தியும் ஒரே சீரான முறையில் நடைபெற்ற யுகமொன்று இருந்ததில்லை, இப்பிரதேசத்தில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு நாட்டில் உடனடியாக அபிவிருத்தி ஏற்பட வேண்டும்.
எனவே அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கி தொழில் துறைகளை உருவாக்கி முன்னோக்கி செல்வோம்.
சர்வதேச துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற அபிவிருத்தி பணிகள் அனைத்தும் தம்மைப் பழிவாங்கும் எண்ணத்தில் கடந்த அரசால் நிறுத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.