
மின்சாரம் என்பது அத்தியாவசிய சேவை. அதனை அரசாங்கம் 24 மணித்தியாலமும் மக்களுக்கு தடையின்றி பெற்றுக்கொடுக்க வேண்டும். நாளேடுகளில் வெளிவரும் செய்திகள் நாட்டின் நிலைமையை உணர்த்துகின்றன என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இன்றைய நாளேடுகளின் முதல்பக்கத்தை எடுத்து பார்க்கும்போது நாடு எவ்வாறான நிலைமைக்கு சென்றுகொண்டு இருக்கின்றது, அரசாங்கம் எந்தளவு நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது என்பது தெளிவாகின்றது.
உண்மையில் நாளேடு ஒன்றை எடுத்து வாசிக்கும்போது நாடு எங்கே செல்கின்றது என்பதை நாட்டின் பிரஜையாக யோசிக்கும்போது ஒருவித அச்ச உணர்வு ஏற்படுகின்றது.
டொலர் இன்மை காரணமாக எரிபொருளை ஏற்றிவந்த ஏழு எண்ணெய் கப்பல்கள் துறைமுகத்தில் தேங்கியிருப்பதாக சிங்கள நாளேடு ஒன்று இன்றைய தினம் செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த ஏழு எண்ணெய்க் கப்பல்களையும் விடுவித்துக்கொள்வதற்கு 140 மில்லியன் டொலர் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் எங்கே டொலர்? எங்கே பணம்? என்றே நான் கேள்வி எழுப்புகின்றேன்.
நாட்டில் டொலர் இன்றி நாம் முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகளை பார்க்கும்போது, நாட்டு மக்களுக்கு இந்த வருடத்துக்குள் குறிப்பாக சித்திரை புதுவருடத்துக்குள் பாரிய சிக்கலை எதிர்கொள்வர என்பது உண்மை. உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்வர்.
டொலரை கொண்டே நாம் எரிபொருளை பெற்றுக்கொள்கின்றோம். தற்போதைய நிலையில் எமது நாட்டில் எரிபொருள் முழுமையாக இல்லை. இதன் காரணமாகவே நாளொன்றுக்கு நான்கு, ஐந்து மணித்தியால மின்வெட்டுக்கு செல்ல நேரிட்டுள்ளது.
தற்போது அமுல்படுத்தப்படும் நான்கு, ஐந்து மணித்தியால மின்வெட்டு இன்னும் சில மாதங்கள் செல்லும்போது 12 மணித்தியாலங்களாக மாற்றமடையலாம். சில நேரங்களில், 24 மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தலாம். அந்த நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் மின்சாரம், நீர் என்பது அத்தியாவசிய சேவையாக காணப்படுகின்றது. இவை இரண்டும் நாட்டு மக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்றன.
எந்த அரசாங்கம் வந்தாலும் நாட்டு மக்களுக்கு வழங்ககக்கூடிய பிரதான சேவைகள் காணப்படுகின்றன. அவை என்னவென்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். ஒன்று மின்சாரம். மின்சாரம் என்பது அத்தியாவசய சேவை. அதனை 24 மணித்தியாலமும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும். அதேபோன்று நீர், எரிபொருள் இவை அனைத்தும் தடையின்றி வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.