நாட்டின் வலுசக்தி தொடர்பில் தீர்மானிக்கும் நிறுவனமாக மாறியுள்ள ஐஒசி!

நாட்டின் வலுசக்தி தொடர்பில் தீர்மானம் எடுக்கும் முழுமையான அதிகாரத்தை அரசாங்கமானது இந்திய நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

ரஷ்யா – உக்ரைனுக்கு இடையிலான மோதல் காரணமாக மேலும் இக்கட்டான ஒரு நிலைமைக்கு எமது பொருளாதாரம் தள்ளப்படும்.

ரஷ்யா – உக்ரைன் மோதலானது நமது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் ஒன்றாக அமைந்துள்ளது.

இந்த யுத்தம் காரணமாக ஏற்படப்போகும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுப்பதற்கான கலந்துரையாடல்களில், அரசாங்கமும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும் ஈடுபட்டதாக எமக்கு தெரியவில்லை.

அரசாங்கம் தற்போது பயணிப்பதை போன்றே பயணிக்கின்றது. நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பாரியளவு பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அத்தியாவசிய துறைகள் மட்டுமன்றி சகல துறைகளும் முன்னோக்கிப் பயணிக்க முடியாதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில்கூட அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்ததாக எமக்கு தெரியவில்லை.

இந்திய நிறுவனமானது எரிபொருள் விலையை மீண்டும் அதிகரித்துள்ளது. பெற்றோல் விலையை 20 ரூபாயாலும் டீசல் விலையை 15 ரூபாயாலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஒரு மாதத்தில் இரண்டாவதுத் தடவையாக எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

டீசல், பெற்றோல் விலையை அதிகரிக்க போவதில்லை என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு. அவ்வாறு கூறிக்கொண்டே இந்திய நிறுவனத்துக்கு தாம் விரும்பியவாறு எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.

டொலர் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கம் இன்று செயலிழந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இந்திய நிறுவனம் அதன் ஸ்திரத்தன்மையை இன்று நிலைநாட்டியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *