
டொலர் தட்டுப்பாட்டுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் இணைந்து தயாரித்த 10 அம்சங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகள், எதிர்வரும் 2ஆம் திகதி கொழும்பில் வெளியிடப்படவுள்ளது.
தெஹிவளை மாதிவல மொனாக் இம்ஜீரியல் ஹோட்டலில் 2ஆம் திகதி இடம்பெறவுள்ள நிகழ்வின் போது, பங்காளிக் கட்சிகள் இணைந்து 10 அம்ச கொள்கையை வெளியிடவுள்ளன.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துரு ஹெல உருமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, லங்கா சமசமாஜ கட்சி, இலங்கை கமியூனிஸ்ட் கட்சி, ஸ்ரீ லங்கா மகாஜன கட்சி, எங்கள் மக்கள் சக்தி உள்ளிட்ட அரசாங்கத்தின் பத்து கட்சிகள் இணைந்தே இந்த முன்மொழிவுகளை வெளியிடவுள்ளன.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஜனநாயக இடதுசாரியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, ஸ்ரீ லங்கா கமியூனிஸ்ட் கட்சியின் செயலாளர் விசேட வைத்தியர் ஜீ.வீரசிங்க, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.