யாழ் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ் தேசிய அரசியல் தரப்பினர் துளியளவும் அக்கறை செலுத்தவில்லை என சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் வேட்பாளர் கருணாகரன் குணாளன் குற்றம் சுமத்தியுள்ளார்.
கிளிநொச்சி உருத்திரபுரம் பிரதேசத்தில் நேற்றையதினம்(30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
திட்டமிட்ட வகையில் யாழ் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழிலிருந்து ஆறாக குறைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இது தொடர்பாக யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது கட்சிகளின் தலைவர்களோ துளியளவும் அக்கறை செலுத்தவில்லை.
மாறாக ஆறு ஆசனங்களையும் பங்கு பிரித்து தமிழ் மக்களை கூறு போடுவதிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.
யாழ் மாவட்டத்தினை விடவும் 12,000 வாக்குகளே அதிகமாகவுள்ள நுவரெலிய மாவட்டத்திற்கு எட்டு ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
12000 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டு ஆசனங்கள் அதிகரிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
அந்த மாவட்டத்தில் இலங்கையின் பெரும்பான்மை இனத்தின் ஆசனங்களை அதிகரிக்கவே இந்நடைமுறை பின்பற்றப்படுவதாக கருதுகின்றேன்.
அதேபோன்று பெரும்பாலும் முழுமையாக சிங்கள மக்களே வாழ்ந்து வருகின்ற மொனராகல மாவட்டத்தில் 399,166 வாக்காளர்களே உள்ள நிலையில் அங்கும் ஆறு ஆசனங்கள் காணப்படுகின்றன.
அதாவது மொனராகலையை விடவும் 19,3000 வாக்குகள் அதிகமாக காணப்படுகின்ற யாழ் & கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்திற்கும் அதேயளவான ஆசனங்களே வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக பலத்த சந்தேகம் எமக்கு எழுந்ததால் சுயேட்சை குழு இல 14 சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுகின்ற நாங்கள் கடந்த 13 -10 – 2024 அன்று யாழ்ப்பாணம் தேர்தல்கள் அலுவலகத்திற்கு சென்று விளக்கம் கோரியிருந்தோம். இதுவரை அவர்களால் இதற்கான விடையளிக்க முடியவில்லை.
அதேபோன்று 449,686 வாக்குகளை கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களே தெரிவாக உள்ளனர்.
1972 ஆம் ஆண்டு சிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான அரசினால் கொண்டுவரப்பட்ட இனப்பாகுபாடு ரீதியிலான பல்கலைக்கழக மாணவர்களுக்கான தரப்படுத்தல் நிலை போன்றதொரு செயற்பாடாகவே இதனையும் கருதவேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.