முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, தேர்தல் செலவின சட்டத்தின் பிரகாரம் செயற்படத் தவறியுள்ளதாகக் குற்றச்சாட்டு முன்வைத்து நேற்று (31) பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனநாயகத்துக்கான பிரஜைகளின் அமைப்பால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் செலவின ஒழுங்குப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் சகல வேட்பாளர்கள், கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் ஆகியோர், அவர்களின் தேர்தல் பிரசாரத்துக்கான வரவு செலவு அறிக்கைகளை தேர்தல் ஆணைக் குழுவுக்குச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
ஜனாதிபதி வேட்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள செலவு அறிக்கைகளை பரிசீலனை செய்தபோது, ரணில் விக்கிரமசிங்கவின் செலவறிக்கையில் சட்டத்தின் பிரகாரம் பெற்றுக்கொடுக்க வேண்டிய பணம் செலுத்தப்பட்டமையை உறுதிப்படுத்துவதற்கான எந்தவொரு ஆவணமும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு பக்கங்களைக் கொண்ட செலவு அறிக்கையை மாத்திரமே ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளதாகவும்,
தமது முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்து வழக்கு தாக்கல் செய்ய பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.