கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு விரைவில் விரைவில் தீர்வு! -டக்ளஸ்

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றங்கள் காரணமாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய அசௌகரியங்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அத்துடன், அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்களின் வாழ்வில் சிறந்த மாற்றத்தினை ஏற்படுத்தக் கூடிய ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தேசிய கடற்றொழிலாளர் மகா சமேளனத்தின் பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நக்டா எனப்படும் தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற குறித்த பொது சபைக் கூட்டத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தொழில் சார் பிரச்சினைகள் தொடர்பாக சமேளனத்தின் மாவட்டப் பிரதிநிதிகளினால் எடுத்துரைக்கப்பட்டது.

குறிப்பாக கடற்றொழில் திணைக்களம் மற்றும் நக்டா ஆகியவற்றின் மாவட்டக் காரியாலயங்களில் காணப்படுகின்ற உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை காரணமாக தமது தேவைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றிக் கொள்ள முடியாது இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று, எரிபொருள் நெருக்கடிகளினால் கடற்றொழிலாளர்கள் தொழில் அச்சுறுத்தல்கள் தொடர்பாகவும் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளையும் தங்கூசி வலை போன்ற தடை செய்யப்பட்ட வலைகளையும் பயன்படுத்துவதால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பாகவும் கடற்றொழிலாளர் பிரதிநிதிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது.

அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்ற ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் செயற்பாடுகளை விரைவில் ஆரம்பிக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,

நன்னீர் மற்றும் பருவ கால நீர் நிலைகளை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கில் வரவு – செலவுத் திட்டத்தில் பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையினால், குறித்த நீர்நிலைகளில் கடந்த காலங்களை அதிகளவு மீன் மற்றும் இறால் குஞ்சுகளை இம்முறை வளர்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அதனூடாக, தொடர்புபட்ட மக்கள் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

நாட்டில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிகளினால் கடற்றொழில் செயற்பாடுகள் பாதிப்படையக் கூடாது என்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனமாக இருப்பதாகவும், இந்த நெருக்கடிகளில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு பரிகாரங்களை வழங்கும் வகையில் அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்து விரைவில் பரிகாரங்கள் வழங்கப்படும் எனவும் கூறினார்.

அத்துடன் பொதுச் சபை கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை சம்மந்தப்படவர்கள் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறும் முன்னுரிமை அடிப்படையில் அவை தீர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அண்மைய நாட்களாக இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோதச் செயற்பாடுகள் கடடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள், தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற ஜனாதிபதி, கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்படையினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், குறித்த விவகாரம் நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

கடற்றொழில் அமைச்சரின் முயற்சியினால் வடக்கு மாகாணத்தில் பரந்தளவில் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் சிறப்பான பொருளாதார நன்மைகளை பெற்றுக் கொடுக்க கூடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *