சீனாவிடமிருந்து விலகிவரும் இலங்கை இந்தியாவை நெருங்குகிறது!

இலங்கைத்தீவானது, சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் உட்பட வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் பாரிய சிரமங்களை அண்மைய நாட்களில் எதிர்கொண்டுள்ளது.

இதனால், பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை தனது அண்டை நாடான இந்தியாவின் பக்கமாகத் திரும்பியுள்ளது.

சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடன்களை மீளச் செலுத்தும் செயற்பாடுகளில் இலங்கை தோல்விகளைக் கண்டுள்ளதால் ‘கடன் பொறி’ ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இந்த நிலையில் கடன்பொறியைத் தவிர்ப்பதற்காகவே இந்தியாவை இலங்கை நாடியுள்ளது.

இலங்கையானது சீனாவை முழுமையாகச் சார்ந்திருக்க முடியாது. அவ்வாறு சார்ந்திருந்தால் அது நாட்டை பொருளாதார ஆபத்துக்குள் கொண்டு செல்வது மட்டுமல்லாமல், இந்தியாவின் அபிலாஷைகள் மற்றும் அமெரிக்கா தலைமையிலான நாற்கர பாதுகாப்புக் குழுவின் (குவாட்) உருவாக்கத்தின் பின்னணியையும் அதன் கரிசனைகளையும் வெகுவாகப் பாதிப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

இலங்கையானது, வீதிகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை நிர்மாணிப்பதற்காக சீனாவிடம் இருந்து 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கொரோனா பரவலினால் ஏற்பட்ட நெருக்கடிகளால் அக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டின் கடன்களை மீள அளிக்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், கடந்த ஜனவரி மாதத்தில் தமது கடன்களை மீளச் செலுத்தும் ஒழுங்கினை மறுசீரமைக்குமாறு பீஜிங்கிடம் இலங்கை கோரிக்கை முன்வைத்தது. இந்நிலையில் தனது நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காக இந்தியாவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.

தற்போது, அந்நியச் செலாவணி நெருக்கடி, சுற்றுலாத்துறை முடக்கம், எரிபொருள் இறக்குமதிக் கட்டணத்தை மீளச் செலுத்த முடியாமை, ஆகிய நெருக்கடிகளுக்கு இலங்கை முகங்கொடுத்து வருகின்றது.

அத்தகைய சூழ்நிலையில், 2022இல் 1.5- 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான சீனக் கடன்களை மீளச் செலுத்துவது இலங்கையின் மீளளிக்கும் திறனுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும் என சர்வதேச மதிப்பீட்டு நிறுவனங்கள் கூறுகின்றன.

அதேநேரம், இலங்கை தனது கடன்களை மீளச் செலுத்துவது தொடர்பில் சீனாவிடத்தில் முன்வைத்த கோரிக்கைக்கு பீஜிங் மிகச் சாதுரியமான பதிலை அளித்துள்ளது.

‘இலங்கை நிச்சயமாக தற்காலிக சிரமங்களை விரைவில் சமாளிக்கும்’ என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் குறிப்பிட்டார். இந்தக் கூற்றானது, புத்திசாலித்தனமாக இலங்கையின் கோரிக்கையை நிராகரிப்பதற்கு சமனானதாகும்.

அம்பாந்தோட்டை துறைமுகம், 17 கிலோமீற்றர் உயரமான நெடுஞ்சாலை, கொழும்பு துறைமுக நகரத்தின் 88 ஹெக்டயர் மற்றும் 27 கிலோமீற்றர் புகையிரதப்பாதை போன்ற முக்கியமான மற்றும் மூலோபாயத் திட்டங்களை சீனா தன்வசம் கொண்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையானது கடன்களை மீளச் செலுத்த முடியாது போகின்றபோது, இந்தத் திட்டங்களையும் நாட்டின் இறையாண்மையின் பகுதியையும் சீனாவிடம் இழக்கும் அபாய நிலைமைகள் ஏற்படலாம் என்றும் எதிர்வு கூறப்படுகின்றது.

இவ்வாறிருக்கையில், இலங்கையில் வளர்ந்து வரும் சீன நலன்களும் செல்வாக்குகளும் இந்தியாவுக்கு தீவிர கவலைக்குரிய பிரச்சினைகளாக உள்ளன. ஏனெனில் அது தனது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என இந்தியா கருதுகின்றது.

இமயமலையில் இரு ஆசிய நாடுகளுக்கு இடையிலான எல்லை மோதல்கள் மற்றும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் விரிவடையும் விரிசல் ஆகியவற்றின் பின்னணியில், இலங்கையை சீனாவின் பக்கம் செல்வதானது தனக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று இந்தியா கருகின்றது.

அதேநேரம், கொழும்பு தனது வெளியுறவுக் கொள்கை தவறாகச் செல்வதையும் விரும்பவில்லை. தமிழர்களின் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியாவைத் தவிர மேற்குலகம், அமெரிக்கா தலைமையிலான குவாட் அமைப்பு நாடுகள் என்பன எடுத்துள்ளன.

அதனால் இந்தியாவைப் பகைத்துக்கொள்வதற்கு இலங்கை விரும்பவில்லை. மேலும்,  இலங்கை இந்தியாவுக்கு அருகில் இருப்பதால் சீனாவின் பிரசன்னமானது, பாதுகாப்பைத் தாண்டிய வேறுபல காரிசனைகளையும் கொண்டதாக உள்ளது.

அவ்வாறிருக்கையில், இந்தியாவும் அமெரிக்காவும் முறையே 13.5 மில்லியன் மற்றும் 3.4 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளதோடு பிற மருத்துவ உதவிகளையும் தாராளமாக வழங்கியுள்ளன.

இவ்வாறான பின்னணியில், இலங்கை இப்போது சீனாவிலிருந்து விலகி இந்தியாவுடன் நெருங்கி வருகிறது. புதுடில்லியுடன் விசேட உறவுகளுக்கு கொழும்பு அர்ப்பணிப்புடன் இருப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா அண்மையில் 912 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள கடனை இலங்கைக்கு வழங்கியதோடு,  இந்தியாவிலிருந்து உணவு மற்றும் எரிபொருளைக் கொள்வனவு செய்யும் இரண்டு கடன் வரிகளுக்கு 1.5 பில்லியன் டொலர்கள் கூடுதல் உதவியையும் வழங்கியுள்ளது.

இலங்கை தனது நாட்டுக்கான இறக்குமதி கட்டணத்தை கட்டுவதற்கு போதிய நிதி இல்லாத நிலையில், அந்த நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கு இந்திய உதவி வந்துள்ளது.

துறைமுகங்கள், உட்கட்டமைப்பு, எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சாரம் மற்றும் உற்பத்தி போன்ற இலங்கையின் உட்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்யுமாறு இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் அசோக மிலிந்த மொரகொட இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், அவர், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மீது சீனா கொண்டிருக்கும் பிடியினைத் தொடர்ந்து, இலங்கையில் சீனா பற்றிய கவலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த பிராந்தியத்தில் வல்லரசுகளின் தன்மையைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அத்துடன் சீன இருப்பையும் வித்தியாசமாகப் பார்க்க வேண்டிய சூழலில் இந்தியாவுடனான எமது உரையாடல் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன் – நம்பிக்கையை வளர்ப்பதற்கும் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

அண்மைய ஆண்டுகளில் சீனாவிடம் இழந்தவற்றை மீண்டும் கைப்பற்றியதற்காக புதுடில்லி மகிழ்ச்சியடைந்துள்ளது. இலங்கையில் இனப்பிரச்சினை காரணமாக முன்னர் இந்தியாவுக்கு ஆதரவாக இல்லாத இலங்கையில் உள்ள பௌத்த தேரர்களுடன் இந்தியா தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளது.

பௌத்த தேரர்கள் சீன உள்கட்டமைப்புகளை எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். அவர்கள் இலங்கையை ‘சீன காலனித்துவத்தின் கீழ் கொண்டு செல்வதற்கு’ ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறினர்.

இலங்கையுடனான பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை 2020இல் வழங்குவதாக இந்தியா உறுதியளித்திருந்தது. பெப்ரவரி நடுப்பகுதியில், இந்தியா 40,000 தொன் எரிபொருளை இலங்கைக்கு அனுப்பியது.

இது இலங்கையின் எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ள உதவியது. எனவே, நிதி உதவிகளை,  அமெரிக்கா தலைமையிலான நாடுகள் குழுவின் அழுத்தம் மற்றும் கலாசார இணைப்பைப் பயன்படுத்தும் இந்தியா ஆகியவை இலங்கையில் நேர்மறையான கருத்தை உருவாக்க இந்தியாவுக்கு உதவியதாகத் தெரிகின்றது.

ஆனால், இலங்கையின் தற்போதைய செயற்பாடு சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில், இலங்கைக்கான தனது விஜயத்தின் போது, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, இரு நாடுகளின் ‘நட்பு உறவுகளில்’ ‘மூன்றாம் தரப்பினர்’ தலையிடக்கூடாது என பதிலளித்தார்.

இந்தியாவை குறிவைத்தே அவரது கருத்துக்கள் அமைந்திருந்தாக அடையாளப்படுத்தப்பட்ட நிலையில், இலங்கையில் சீனாவை எதிர்மறையாக சித்தரிக்கப்படுவதாக இந்தியா மற்றும் அமெரிக்கப மீது சீன ஊடகங்கள் குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-யே.பெனிற்லஸ்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *