தமிழ்தேசியத்துக்காக வாக்களியுங்கள் என்பவர்கள் ஏன் பல துண்டுகளாக பிரிந்து நிற்க வேண்டும்?
தலைவரையே ஏமாற்றிய இவர்களா தமிழ்த்தேசியத்தை காப்பாற்றுவார்கள்?
நாவற்குழியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தேசிய கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட பிரதான வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் மக்களுக்கான தூர நோக்குடைய அரசியலை மேற்கொள்வதற்காக தலைவரால் அனைத்து கட்சிகளையும் ஒன்றாக்கி உருவாக்கப்பட்ட கட்சி என்ற ஒரே காரணத்துக்காக – தலைவரால் அடையாளம் காட்டப்பட்ட பின்னரே மக்கள் இவர்களுக்கு வாக்களித்தார்கள்.
ஆனால் போர் முடிந்த அடுத்த தேர்தலிலேயே தமக்கு ஆசனம் தரவில்லை என்று ஒரு தரப்பு பிரிந்து போனார்கள். இன்று இன்னும் பல பிரிவுகளாக பிரிந்து சென்று தலைவருக்கே அவர்கள் எல்லோரும் துரோகம் செய்துவிட்டார்கள்.
இவர்கள் சுயநிர்ணயத்துக்காக வாக்களிக்க கேட்டார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் உங்களிடம் வாக்கு கேட்டது தமது சுயநலத்துக்காக. தாம் சாகும்வரை பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற சுயநலத்துக்காக வாக்கு கேட்டார்களே தவிர தமிழ்தேசியத்துக்காகவோ சுயநிர்ணயத்துக்காகவோ வாக்கு கேட்கவில்லை.
எமது இளைஞர்கள் இப்போதும் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்றால் தமிழ்த்தேசியம் எங்கே வாழ்கிறது? மக்கள் இல்லாத தேசத்தில் எப்படி தமிழ்த்தேசியம் உருவாகும்? மக்களை வாழ வைக்காத இவர்களால் தமிழ்த்தேசியத்தை பெறமுடியுமா?
இன்று 9 ஆக இருந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை 6 ஆக குறைத்தது இவர்களது சுயநல அரசியலுக்கு கிடைத்த பரிசு.
ஆகவே உங்களுக்கு வேலை செய்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாடுபடுவோரை நீங்கள் தெரிவு செய்தால் மட்டுமே இந்த மண்ணில் தமிழர்களின் இருப்பு சாத்தியமாகும், என்றார்.