ஈ.பி.டி.பி மக்கள் நலனில் இருந்தே என்றும் செயற்பட்டு வருகின்றது! – டக்ளஸ் தெரிவிப்பு

 

நான் உசுப்பேற்றல்களால் ஆயுதப் போராளியாகவோ, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கோ வந்தவன் அல்ல. தமிழ் மக்கள் மீதிருந்த உணர்வுகளால் வந்தவன். நான் மக்கள் நலனில் இருந்தே என்றும் செயற்பட்டு வருகின்றேன். மக்கள் மீதான எனக்குள்ள உணர்வுகளே இன்றுவரை நாடாளுமன்றில் என்னை பிரதிநிதியாக்கவும் வைத்திருக்கின்றது   என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

குருநகர் பிரதேச கடற்றொழிலாளர் சங்கங்களினால் ஈ.பி.டி.பியின் வீணை சின்னத்திற்கு ஆதரவினை தெரிவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்திருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறுகையில்,

இம்முறையும் மக்கள் என்னை வெற்றிபெறச் செய்வார்கள். அதில் எவ்வித சந்தேகமும் இருக்கப் போவதில்லை. இதேநேரம் நான் தமிழ் மக்களாகிய உங்களிடம் என்னுடன் ஈ.பி.டி.பியிலிருந்து மேலும் 3 அல்லது நான்கு உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வதற்கான அங்கீகாரத்தை இம்முறை தாருங்கள் என்றே கோருகின்றேன்.

அவ்வாறு மக்களாகிய நீங்கள் எமக்கு அரசியல் பிரதிநிதித்துவம் ஊடாக அதிகாரத்தை வழங்கினால் அதனூடாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும்   தீர்வுகளை பெற்றுத்தர எம்மால் முடியும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.

வடக்கில் யுத்தத்தின் மக்கரான காலமானாலும் சரி அதன் பின்னரான காலத்திலும்  ஏற்படுத்தப்பட்ட மீள்குடியேற்றங்களானாலும் சரி பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளானாலும் சரி மக்களின் வாழ்வாதார மேம்பாடுகளானாலும் சரி கல்வி மருத்துவம உள்ளிட்ட அதியாவசிய விடயங்களானாலும் சரி எமது முயற்சியால் தான் நிறைவு செய்யப்பட்டன. இதை வேறெவரும் உரிமைகோர முடியாது.

அதுமட்டுமல்லாது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே எமது உறுதியான நிலைப்பாடு. இதுவே இன்று வெற்றிபெற்றுள்ளது. அத்துடன் எமது கொள்கை மிகவும் வலுவானது. அதுமட்டுமல்லாது எமது கொள்கையின் மீது எமக்கிருக்கும் பற்றே, எமது கொள்கை மீது எமது அதீத நம்பிக்கைக்கு காரணம். 

அதனால்தான் நடைமுறை சாத்தியமான எமது கொள்கை இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வலுப்பெற்றுள்ளது.

அத்துடன் அரசியலுக்காகவோ அல்லது வாக்குக்காகவோ எதையும் நான் பேசுவதில்லை. மக்கள் நலன் சார்ந்தே எனது அனைத்து செற்பாடுகள் அமையும். அதனடிப்படையில் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

நான் ஏனைய தமிழ் அரசியல் தரப்பினரை போன்று நாடாளுமன்றை அலங்கரிக்க வடக்கு கிழக்கிலுள்ள ஒட்டுமொத்த ஆசனங்களையும் கேட்கவில்லை. குறைந்தது 4 முதல் 5 ஆசனங்களையே தாருங்கள் என கோருகின்றேன்.

அந்த வகையில் கார்த்திகை 14 ஆம் திகதியன்று உங்கள் ஒவ்வொரு வாக்கினூடாக எமது வீணைச் சின்னத்தை வலுப்படுத்தி கொடுப்பீர்கள் என நம்புவதுடன் அதனூடாக எமது மக்கள் தமது அபிலாசைகளை வெற்றிகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *