எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கத்தோடு இணைந்து என்னால் வேலை செய்ய முடியும் எனவும் நான் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு எதையும் செய்யாது காலத்தையும் வீணடித்து மக்களையும் ஏமாற்றும் அரசியல்வாதியல்ல எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
யாழ் சுழிபுரத்தில் இன்றையதினம்(08) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கை தனிக்கட்சியில் வாருங்கள் இன்னும் அதிகமாக ஆதரிக்கிறோம் என்பது. அதற்கிணங்க இம்முறை ஜனநாயக தேசிய கூட்டணி என்ற கட்சியில் வந்துள்ளேன்.
அத்தோடு மக்களுக்காக பல வேலைத்திட்டங்களை அனைத்து கிராமங்களிலும் செய்துவிட்டு வந்திருக்கிறேன்.
கடந்த காலங்களில் எவ்வாறு ஆட்சியில் இருந்த அரசாங்கங்களோடு இணைந்து செயற்பட்டு மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய பாடுபட்டதைப்போன்று இம்முறை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் அமையவுள்ள புதிய அரசாங்கத்தோடு இணைந்து என்னால் வேலை செய்ய முடியும்.
ஏனென்றால் நான் மற்றவர்களை போன்று எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு எதையும் செய்யாது காலத்தையும் வீணடித்து மக்களையும் ஏமாற்றும் அரசியல்வாதியல்ல.
யுத்தம் முடிந்து இத்தனையாண்டுகள் கடந்தும் நமது மக்கள் முன்னேறுவதற்குரிய வாய்ப்புகள் இருந்தும் அவற்றை பெற முயற்சிக்காமல் மக்களை கைவிட்டவர்கள்தான், கடந்த கால தேர்தல்களில் மக்களது உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அதிலிருந்து வாக்குகளை பெற்று வென்றபின்னர் அவற்றைப்பற்றியே சிந்திக்காதவர்கள்.
அப்படியானவர்களை இம்முறை மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள். தமக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றிய – மக்களை வாழ்வதற்கு வழி செய்து கொடுத்தவர்களையே இம்முறை மக்கள் தெரிவு செய்வார்கள் எனவும் தெரிவித்தார்.