நாட்டில் பெய்த கடும் மழையால் மக்கள் பாதிப்பு – 9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

 

பதுளை மாவட்டத்தில்  நேற்று  பெய்த  கடும் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளது.    

அத்துடன்,  தொடர் மழை காரணமாக பதுளுஓயா ஆறு பெருக்கெடுத்ததால் பதுளை நகரை அண்டிய விஹாரகொடை பகுதியில் உள்ள சுமனதிஸ்ஸகம பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.   

இதன் காரணமாக இப்பகுதிகளில் உள்ள சுமார்  50 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பதுளுஓயா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் வீடுகளுக்குப் புகுந்த வெள்ளநீர் வடிந்தோடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.    

இதேவேளை ஹாலிஎல – வெளிமடை பிரதான வீதியின் 100ஆவது கிலோமீற்றருக்கு அருகே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இப்பாதையின் ஊடாக போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளை அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   

தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையின் காரணமாக பதுளை- செங்கலடி வீதி உட்பட பல பிரதான வீதிகளில் ஆங்காங்கே சிறியளவில் மண்மேடுகள் சரிந்துள்ளன.   

அட்டாம்பிட்டிய, அப்புத்தளை மற்றும் பண்டாரவளை ஆகிய பகுதிகளில் பனிமூட்டமான வானிலை நிலவி வருகிறது.   

பசறை, ஹாலிஎல மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு அனர்த்தம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக  பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.   

இதேவேளை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலச் சூழல் சாதகமாக இருப்பதால் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *