சண்டித்தன அரசியல் நாங்கள் செய்யவில்லை – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

அறகலய காலத்தில் பாராளுமன்றத்தை எரிப்போம் என்றார்கள், அதுதான் சண்டித்தனமான அரசியல். நாம் எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது, அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படும்போது களத்துக்கு செல்கின்றோம். இது சண்டித்தன அரசியல் கிடையாது – என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை சி.எல்.எப் மைதானத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கெஞ்சி கேட்டால் அது பிச்சை, துணிந்து கேட்டால்தான் அது உரிமை. எமக்கு அனுதாபம் வேண்டாம், அங்கீகாரமே வேண்டும். அந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டுமெனில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்து உரிமை அரசியலுக்கு ஆணை வழங்குங்கள் எனவும் ஜீவன் குறிப்பிட்டார்.

பிரசாரக் கூட்டத்தில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘உரிமை இல்லாததால்தான் ஒரு செங்கலைக்கூட வைக்க முடியவில்லை. எமக்கு சலுகை அரசியல் தேவை இல்லை. எமது மக்களை இழிவுபடுத்துவதற்காக அல்ல தெளிவுபடுத்துவதற்காகவே இந்த விடயத்தை குறிப்பிடுகின்றோம்.

அனுதாபம் இருந்தால் சலுகைகள் மட்டும்தான் கிடைக்கும், அங்கீகாரம் இருந்தால்தான் உரிமைகள் கிடைக்கும். எனவே, அனுதாபமா, அங்கீகாரமா என வரும்போது நாம் அங்கீகாரத்தின் பக்கம்தான் நிற்க வேண்டும். உரிமைகள்தான் எமக்கு முக்கியம்.

காங்கிரசுக்கு வழங்கப்படும் வாக்குகளானவை கல்வி, காணி மற்றும் உரிமைக்காக வழங்கப்படும் வாக்குகளாகும். நமக்கான பிரதிநிதித்துவம் இருந்தால்தான் பாராளுமன்றம் ஊடாக நமக்குரிய உரிமைகளை பற்றி பேச முடியும்.

 எமக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் சொந்தங்களுக்கும் நன்றிகள். இம்முறை நடைபெறும் தேர்தலானது மிக முக்கியமானதாகும். எனவே, இதனை பிரச்சாரக் கூட்டமாக பார்க்காமல், ஒரு விழிப்புணர்வுக் கூட்டமாக பாருங்கள்.

நுவரெலியா மாவட்டத்தில் 308 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் சிலர் அரசியல் கைக்கூலிகளாக வாக்குகளை சிதறடிப்பதற்காக போட்டியிடுகின்றனர். அவ்வாறானவர்கள் நம்பக்கூடாது. ஏனெனில் மாற்றம் பற்றி தற்போது கதைக்கும் அவர்கள் தேர்தலின் பின்னர் காணாமல்போய்விடுவார்கள்.

ஆறு மாத காலப்பகுதிக்குள் தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தை ஆயிரத்து 350 ரூபாவாக பெற்றுக்கொடுத்தோம். ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதியாக ரணில் இல்லாவிட்டால் அந்த 1,350 ரூபாவும் கிடைக்காது என்ற அச்சம் காணப்பட்டது. அதனால்தான் நாம் 1,350 ரூபாவுக்கு உடன்பட்டோம். ஜனாதிபதி தேர்தலில் அவர் வென்றிருந்தால் நிச்சயம் 1,700 ரூபா கிடைக்கப்பெறும் என்ற முடிவுக்கு வந்தோம். எனவே, இராஜதந்திர நகர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும்.” – என்றார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *