
முல்லைத்தீவு, பெப்.28
கொக்கிளாய் – கம்பித்தறை, வில்லுவெளி ஆகிய இடங்களில் தமிழர்களின் பூர்வீக வயல்நிலங்களை இல்மனைட் அகழ்வுக்காக கனிய பொருள் மணல்கூட்டுத்தாபனம் அபகரித்துள்ளது. இவ்வாறு அபகரிக்கப்பட்ட காணிகளை பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ.சுமந்திரனின் ஆலோசனைப்படி, சட்டரீதியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
தமிழர் தாயகப் பரப்பில் தற்போது அபகரிப்புச் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன என்று குற்றஞ்சாட்டிய ரவிகரன், அபகரிப்புச் செயல்பாடுகளைத் தடுக்க சர்வதேசம் தலையீடு செய்யவேண்டும் என்றும் இதன்போது கோரினார். பாதிக்கப்பட்ட கொக்கிளாய் தமிழ் மக்களிடம் வழக்குத் தொடர்வதற்கான ஆவணங்களை சேகரிக்கும் செயல்பாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், “கொக்கிளாய் பகுதியில் எவ்வித அறிவிப்புக்களுமின்றி தங்களுடைய காணிகளை அளவீடு செய்து, அபகரிக்கப்படுவதாக மக்கள் எம்மிடம் செய்த முறைப்பாட் டுக்கு அமைவாக நாம் இங்கு வருகைதந்துள்ளோம். “ஏற்கெனவே இல்மனைட் அகழ்வுக்காக கொக்கிளாய் – கம்பித்தறை என்ற பகுதியில் 44 ஏக்கருக்கும் மேற்பட்ட தமிழர் களின் பூர்வீக வயல் காணிகள் அபகரிகப்பட்டுள்ளன.
“இந்நிலையில், தற்போது அதற்கு அருகிலுள்ள வில்லுவெளி என்னும் இடத்திலும், 60 ஏக்கருக்கும் மேற்பட்ட தமிழர்களின் பூர்வீக வயல் காணிகள் அளவீடு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. “இந்த விடயத்தை சட்ட ரீதியாக அணுகி, தமிழ் மக்களின் இந்தப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற நோக்கில், பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட் டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனிடம் ஆலோசனைகளைப் பெற்று, முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணியான தனஞ்சயனை அழைத்துவந்து அபகரிப்பு நிலைமைகளை நேரடியாகக் காண்பித்துமிருந்தோம்” என்றார்