
எந்தவொரு தேவாலயத்தின் சிலுவையின் மீதும் சத்தியம் செய்து தாம் குற்றமிழைக்கவில்லை என்பதனை நிரூபிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் தேவாலயமொன்றின் ஆராதனைகளில் பங்கேற்ற போது நேற்றைய தினம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தாம் சிங்கப்பூரில் குயின் எலிசபத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய எந்தவொரு தகவல்களும் கிடைக்கவில்லை.
இது தொடர்பில் எந்தவொரு தேவாலய சிலுவையின் மீதும் சத்தியம் செய்யத் தயார். இந்த புனித தேவாலயத்தில் இருந்து கொண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய முக்கிய விடயமொன்றை கூற விரும்புகின்றேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி அறிந்து கொண்ட நாள் வெளிநாடு சென்றதாக சிலர் பிரச்சாரம் செய்கின்றார்கள்.
இது முற்று முழுதாகவே பொய்யானது. இது பற்றி புலனாய்வுப் பிரிவினரோ அல்லது வேறும் தரப்பினரோ தகவல் வழங்கியிருந்தால் நான் எனது பயணத்தை நிறுத்தியிருப்பேன்.
நான் மருத்துவ சிகிச்சைகளுக்காக சென்றிருந்தேன். சில ஊடகங்களில் தாக்குதல் பற்றி வைத்தியசாலைக்கு தொலைபேசி மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டது என செசய்தி வெளியிடுகின்றன.
எனினும் சிங்கப்பூர் வைத்தியசாலைகளில் நோயாளிகளிடம் தொலைபேசிகளைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை.
பௌத்தர் என்ற ரீதியில் புத்தரின் பாதங்களை தொழுது இந்த சம்பவம் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை என்பதனை உறுதிபடக்கூற முடியும். தகவல்கள் கிடைத்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்க மாட்டேன்.
சஹ்ரானை கைது செய்யுமாறு நான் ஜனவரி மாதமே பணிப்புரை விடுத்திருந்தேன். நாட்டுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எந்தவொரு விடயத்திற்கும் நான் உடந்தையாக இருக்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.