ரெலோவின் மத்திய குழுவை உடனடியாகக் கூட்டவும், அனைத்து மத்திய குழு உறுப்பினர்களுக்கும் உரிய முறையில் அழைப்பிதழ் அனுப்பவும் நடவடிக்கை எடுக்குமாறு கட்சியில் செயலாளர் நாயகம் கோ.கருணாகரமிடம் கட்சியின் நிர்வாகச் செயலாளர் என்.விந்தன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்தக் கோரிக்கை கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கட்சி சார்பில் நானும் ஒரு வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு 02/10/2024 அன்று எமது கட்சியின் திருகோணமலை காரியாலயத்தில் நடத்தப்பட்ட ரெலோவின் தலைமைக் குழு கூட்டம் ஏகமனதாக முடிவெடுத்திருந்தது.
தலைமைக் குழுக் கூட்டத்துக்கு எமது கட்சியின் வடக்கு, கிழக்கு மாவட்ட செயலாளர்களும், துணை மாவட்ட செயலாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். குறித்த கூட்டத் தீர்மானத்துக்கு மாறாக பின்பு எனது பெயர் நீக்கப்பட்டிருந்தது.
இது விடயமாகவும், தேர்தல் காலத்தில் எமது கட்சியின் பெயரைப் பயன்படுத்தி, கட்சியின் பெயரால், எமது கட்சி சார்ந்த சில வேட்பாளர்கள் சில தொழில் நிறுவனங்களிடம் பல கோடிகள் பெற்று, எமது கட்சி சார்பில் ஏனைய மாவட்டங்களில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்குச் சம பங்கீடு அல்லது சம அளவில் நிதி ஒதுக்காத விடயம் தொடர்பாகவும், பெற்றுக்கொண்ட நிதித் தொகைகள் விபரம் தொடர்பாகவும், எமது கட்சி சார்ந்த சிலர் கடந்த அரசிடம் பன்முகப்படுத்தப்பட்ட விசேட நிதி ஒதுக்கீடு மூலம் பல கோடிகள் பெற்று, அதில் இருபது கோடி ரூபாவை ஒரு வேட்பாளருக்கு மட்டும் ஒதுக்கி, எமது கட்சியின் ஏனைய வேட்பாளர்களும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களும் திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்பட்டமை தொடர்பாகவும், இவ்வாறான நிகழ்வுகளின் எதிரொலியாகவும் பிரதிபலிப்பாகவும் தேர்தல் காலங்களில் எமது கட்சியினரால் நடத்தப்பட்ட ஊடக சந்திப்புக்கள் உட்பட இன்னும் பல விடயங்கள் தொடர்பாகவும் கூடிப் பேசுவதற்கு ஏதுவாக இம்மாதம் 28 அல்லது 29 ஆம் திகதிகளில் எமது கட்சியின் மத்திய குழுவைக் கூட்டவும்.
மேலும் கட்சியின் மூத்த உறுப்பினரும் கட்சியில் கடந்த நாற்பது வருடங்களாகத் தொடர்ச்சியாகப் பயணிப்பவரும் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினரும் கட்சியின் நிர்வாகச் செயலாளரும் கட்சியின் முன்னாள் வலிகாமம் தெற்கு பிரதேச சபை, யாழ்ப்பாணம் மாநகர சபை, வடக்கு மாகாண சபை போன்றவற்றின் உறுப்பினருமான எனக்கு அறிவிக்காமல் கடந்த 20.11.2024 அன்று குறிப்பிட்ட சிலருடன் இணைய வழியாக தாங்கள் தலைமைக் குழு கூட்டத்தைக் கூட்டியது கவலையளிக்கின்றது.” – என்றுள்ளது.