எல்ல – தெமோதரை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் சுரங்கத்திற்குள் இருந்து இன்று (05) காலை இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தெமோதரை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய இராமகிருஸ்ணன் கிருஸ்ணகுமார் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
எல்ல – தெமோதரை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள 42 ஆவது ரயில் சுரங்கத்திற்குள் இளைஞன் ஒருவர் சடலமாகக் கிடப்பதை அவதானித்த ரயில் நிலைய கண்காணிப்பாளர் ஒருவர், இது தொடர்பில் எல்ல பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் நேற்றைய தினம் இரவு 08.00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றதாக இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த இளைஞன் நேற்று இரவு கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்த இளைஞன் எதற்காக தெமோதரை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள சுரங்கத்திற்கு வந்தார் என்பதைப் பற்றிய விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.