நடைபாதை கடைகளை அகற்றுமாறு நகரசபை உத்தரவு- அகற்றாவிடில் நடவடிக்கை!

வவுனியாநகரில்பொதுப்போக்குவரத்துக்கு இடையூறான வகையில் காணப்படும்நடைபாதை வியாபாரநிலையங்களை உடனடியாக அகற்றுமாறு வவுனியா நகரசபை செயலாளரால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இலுப்பையடிப்பகுதி மற்றும் சந்தைக்கு அண்மித்த பகுதிகள், வைத்தியசாலையை வீதி ஆகியவற்றில் வியாபாரத்தை முன்னெடுத்துவரும் நடைபாதை கடைகளை  அகற்றுமாறே குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னராக இவ்வியாபார நிலையங்களை அகற்றுமாறு கோரப்பட்டுள்ளதுடன் அந்த தினத்தில் அகற்றப்படாது விடின் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையினை நகரசபை முன்னெடுக்கும் என்று செயலாளரால் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின்பிரதிகள் வடமாகாண ஆளுநர்,மாகாண உள்ளூராட்சித்திணைக்களம், வவுனியா மாவட்டசெயலாளர்,வீதி அபிவிருத்தி அதிகாரசபை,பொலிஸ்போக்குவரத்துப்பிரிவு ஆகிய திணைக்களங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

வவுனியா நகரப்பகுதிகளில் உள்ள நடைபாதை வியாபாரநிலையங்களால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்துவருகின்றனர். குறிப்பாக நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பிரதான வீதிகளினூடாக பயணம் செய்கின்றனர். இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாவதுடன், போக்குவரத்து நெருக்கடிநிலையும் ஏற்ப்படுகின்றது. 

இது தொடர்பாக வவுனியா நகரசபைக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வந்தநிலையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *