தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தோற்றம் பெற்ற காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது பாணமையிலிருந்து தென் கிழக்கு திசையில் 548 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றது. இது அடுத்து வரும் நாட்களில் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 10 ஆம் திகதி அன்று இலங்கையின் கிழக்கு கடற்கரைக்கு சமாந்தரமாக (கிழக்கு மாகாணத்திலிருந்து 230 கி.மீ. தொலைவிலேயே அதன் மையம் காணப்படும்) வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்
இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் நாளை முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை சில இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் கனமழையும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக எதிர்வரும் 10, 11 மற்றும் 12ம் திகதிகளை உள்ளடக்கிய 72 மணித்தியாலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 150 மி.மீ. க்கு கூடுதலாக திரட்டிய மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளது.
இன்று இரவு முதல் வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வளிமண்டல சாரீரப்பதன் மாற்றம் காரணமாக இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு குளிரான வானிலை நிலவும்.
அதேவேளை எதிர்வரும் 14 ஆம் திகதி அன்று இந்தோனேசியாவின் பண்டா அச்சே மாநிலத்திற்கு வடக்கே காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும். இது சிறிய அளவிலான புயலாக மாறுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன. இதுவும் ஆரம்பத்தில் மேற்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து பின்னர் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் இதன் நகர்வுப் பாதையும், நகரும் திசையும் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் இடமும் அவசியம் கவனிக்கப்பட வேண்டியது. இது தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். என மேலும் குறிப்பிட்டுள்ளார்.