மருதானை மௌலானா சனசமூக மண்டபத்தை அனுமதியின்றி நிர்மாணிப்பதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (9) உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரால் மேற்படி மண்டப வளாகத்தில் மேற்கொள்ளப்படும் அனுமதியற்ற நிர்மாணங்களுக்கு எதிராக பிரதேசவாசிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.
கொழும்பு மாநகர சபை சார்பில் ஆஜரான சட்டத்தரணி, அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டமை தொடர்பில் தமது கட்சிக்காரர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இங்கு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, இருதரப்பு சட்டத்தரணிகளுக்கும், வழக்கைத் தீர்ப்பதே பொருத்தமானது எனத் தெரிவித்தார்.
அதன்படி, வழக்கு விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஏப்ரல் 1ஆம் தேதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.