புதிய ஆண்டில் 'முறைமை மாற்றத்தை' நாம், எம்மில் ஒவ்வொருவரிடமிருந்தும் ஆரம்பிக்கவேண்டும் – ஆளுநர் நா. வேதநாயகன்

வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி. 

மேலும், ஆளுநரின் வாழ்த்துச் செய்தியில்  தெரிவித்துள்ளதாவது ,  புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில், அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

இந்த ஆண்டு வடக்கு மக்கள் ஒவ்வொருவருக்கும் முன்னேற்றத்தைக் கொண்டுவரட்டும்.

புத்தாண்டு என்பது தனியே கொண்டாட்டத்துக்கான நேரம் மட்டுமல்ல எங்கள் சிந்தனைகளை புதுப்பித்தலுக்கான தருணமும் கூட. 

மகிழ்வுடன் வரவேற்கும் புதிய ஆண்டில் ‘முறைமை மாற்றத்தை’ நாம், எம்மில் ஒவ்வொருவரிடமிருந்தும் ஆரம்பிக்கவேண்டும் என்று விரும்புகின்றேன். 

எங்கள் நிர்வாகத்தின் முதுகெலும்பாக, மக்களின் நம்பிக்கையை வளர்ப்பதிலும் – அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் சேவைகளை வழங்குவதிலும் அரச பணியாளர்கள் ஒவ்வொருவரினதும் அர்ப்பணிப்பும் தொழில்முறையும் மிக முக்கியமானவை. 

நேர்மை, செயல்திறன் மற்றும் பொறுப்புணர்வோடு உங்கள் விலைமதிப்பற்ற சேவைப் பங்களிப்புகளைத் தொடரவேண்டும் என அன்புரிமையுடன் கோருகின்றேன்.

பொதுச் சேவையில் மிக உயர்ந்த தரங்களை நிலைநிறுத்த நாங்கள் ஒன்றாகப்பாடுபடுவோம். 

எங்கள் மக்கள் அனைவருக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்க அயராது உழைப்போம்.

புதிய ஆண்டிலிருந்து எங்கள் பொதுச்சேவையை அன்பானதும், விரைவானதும், தரமானதுமாக மாற்றுவதற்கு நாம் ஒவ்வொருவரும் உறுதிபூண்டு ‘முறைமை மாற்றத்தை’ ஆரம்பிப்போம். 

இந்த ஆண்டை எமது மாகாணத்துக்கு, ஒரு குறிப்பிடத்தக்க இலக்கை அடைவதற்கான ஆண்டாக மாற்ற, அரசியல் தலைமைத்துவத்தில் உள்ளவர்கள் – அரச பணியாளர்கள் – மக்கள் என நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பயணிப்போம்.- என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *