24 மணித்தியாலங்களில் நடந்த துயரம் – பெண் உட்பட 5 பேர் பலி

 

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் ஐந்தில் பெண் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (04) எம்பிலிப்பிட்டிய, ஆனமடுவ, பொத்துஹெர, கட்டுவன மற்றும் நிட்டம்புவ பொலிஸ் பிரிவுகளில் மேற்படி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இரத்தினபுரி – எம்பிலிபிட்டிய பிரதான வீதியில், உடவலவயில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்று கல்வங்குவ பிரதேசத்தில், 

பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிய போது பெண் பயணி ஒருவர் பஸ்ஸின் பின் சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த பெண் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனமடுவ, ஆதிகம – கிரியன்கல்லிய வீதியில் கட்டுவ பிரதேசத்தில், ஆதிகமவிலிருந்து கிரியங்கல்லிய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நடந்து சென்ற பாதசாரி மீது மோதியுள்ளது.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பாதசாரியும் ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பாதசாரி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொத்துஹெர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பொக்க ரம்புக்கனை வீதியின் தொரவத்துர பகுதியிலும் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

தம்பொக்கவில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை ஓட்டுநர் கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநரும், பின் இருக்கையில் வந்தவரும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.

கட்டுவன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன ஊருபொக்க வீதியில் ருக்மல்பிட்டிய பிரதேசத்தில் பெங்கமுகந்தவிலிருந்து கட்டுவன நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று,  

பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்ட போது, பயணி ஒருவர் திடீரென பஸ்ஸூக்கு முன்னால் வீதியைக் கடக்க முற்பட்ட போது விபத்துக்குள்ளானார்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சபுகஸ்தென்ன சந்தியில் வெயங்கொடையிலிருந்து, ஹம்புடியாவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *