மக்களின் உரிமைக்காக போராடுபவர்களை கைது செய்வதற்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியினரின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எரிபொருட்களின் விலையேற்றம், விலைவாசி உயர்வு மற்றும் மக்களின் உரிமைக்காக போராடுபவர்களை கைது செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “அண்மைக்காலமாக அரசாங்கம், மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

குறிப்பாக உணவுப்பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றில் சடுதியான விலை அதிகரிப்பானது அனைத்து மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் நலனை முன்னிறுத்துவோம் என்று ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் மக்கள் மீது சுமைகளையும் துன்பங்களையும் மாத்திரமே ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனால் மக்கள் வீதியில் இறங்கி போராடவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை அரசின் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டிக்கும் அரசியல் சமூக செயற்பாட்டாளர்களை, பொலிஸ் ஊடாக கைது செய்து தனிமைப்படுத்தும் செயலை இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது” என குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த ஆர்பாட்டத்தில் இலங்கை ஆசிரியர்சங்க உறுப்பினர்கள், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர், புதிய சிந்தனை பெண்கள் அமைப்பு ,தேசிய கலை இலக்கிய பேரவையினர் உட்பட பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *