அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 12ஆவது மாடியில் இருந்து குதித்து 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் பொரளையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (10) இரவு இடம்பெற்ற இச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் பொரளை பொலிஸார், சிறுமி மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த சிறுமி கொழும்பில் உள்ள ஒரு முன்னணி மகளிர் பாடசாலையில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுமி சிறிது காலமாக மன அழுத்தம் காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக சிறுமியின் தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த சிறுமியின் உடல் தற்போது தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் நிறுவனத்தின் பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.