இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வாழ்வாதாரத்திற்காக மீன்பிடியில் ஈடுபடுகின்றார்கள் என்றால் நாங்கள் பொழுது போக்கிற்காகவா மீன்பிடியில் ஈடுபடுகின்றோம், என யாழ். மாவட்ட மீன்பிடி கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதி மகேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று (11) யாழ்ப்பாணத்தில் சம்மேளனத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தங்களுடைய மீனவர்கள் வாழ்வாதார நோக்கத்திற்காக எங்களுடைய கடல் எல்லைக்குள் வந்ததாகவும், அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏறக்குறைய 30 வருடங்களாக, இந்திய மீனவர்களை கைது செய்வதும் விடுவதும் தொடர்கதையாக காணப்படுகின்றது.
அவர்கள் வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு வந்தால் நாங்கள் பொழுதுபோக்கிற்காக கடலுக்கு செல்வதில்லை. நாங்களும் வாழ்வாதாரத்திற்காக தான் கடல் தொழிலுக்கு செல்கின்றோம். இந்தியா இழுவைப் படகின் அட்டகாசத்தினால் நாங்கள் நமது கடலில் தொழில் செய்ய முடியவில்லை. தமிழக முதலமைச்சரே எமது மக்களின் வாழ்வுரிமையையும் பற்றி சற்று நீங்கள் சிந்தியுங்கள்.
உங்களுடைய கடற்பகுதியில் பாகிஸ்தான் மீனவர்களோ அல்லது சீன மீனவர்களோ வந்து மீன்பிடியில் ஈடுபட்டால் அவர்களை வாழ்வாதார அடிப்படையிலேயோ அல்லது மனிதாபிமான அடிப்படையிலேயோ நீங்கள் விடுதலை செய்வீர்களா? நிச்சயம் நீங்கள் அவர்களை கைது செய்வீர்கள் இன்றைக்கும் உங்கள் எல்லையில் நீங்கள் சண்டை செய்து கொண்டுதான் இருக்கின்றீர்கள். அதுபோல எங்களது எல்லைக்குள் நீங்கள் வரவேண்டாம்.
எங்களது வளங்களை சுரண்டிக்கொண்டு, வாழ்வாதாரம் மனிதாபிமானம் என்று பொய்களை கூறிக்கொண்டு எங்களது மக்களை நிர்க்கதியாக்குகின்றீர்கள். எனவே உங்களது கடற்படையினை வைத்து உங்களுடைய மீனவர்களை எல்லை தாண்ட விடாது கட்டுப்படுத்துங்கள் எங்களது வளங்களை நாங்கள் பாதுகாத்துக் கொள்கின்றோம் என்றார்.