இந்தியா – தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், இ.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய ஆ.சுமந்திரன் ஆகியோர் நேற்றையதினம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்
இதன்போது இலங்கை மீனவர்களது பிரச்சினைகள் குறித்து பேசாமல் முதலமைச்சருடன் சிரித்துக்கொண்டு வெறுமனே செல்ஃபி எடுத்தமை வருத்தம் அளிப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட மீனவ சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் திரு.ரட்ணகுமார் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள சம்மேளனத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை மீனவர்களது பிரச்சினைகள் தொடர்ந்தும் தொடர்கதையாகவே உள்ளது. இலங்கை மீனவர்களின் வலைகள் மற்றும் தொழில் முதல்கள் இந்திய இழுவைப் படகுகளால் அழிக்தப்படுகின்றன.
இது இவ்வாறு இருக்கையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடியில் ஈடுபடும்போது இலங்கை கடற்படை கைது செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான கருத்து பிழையானது என்றுகூட அவர்கள் முதலமைச்சரிடம் சுட்டிக்காட்டவில்லை.
கடந்த வருடம் நடுப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சீறுவாணம் விட்டதுபோல, இந்திய இழுவைமடி தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முல்லைத்தீவு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நோக்கி ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மக்களுக்காக இந்த போராட்டத்தை செய்கின்றார்கள், இது வரவேற்கத்தக்க விடயம் என்று அப்போது நாங்களும் சந்தோசப்பட்டோம். ஆனால் நேற்று முதலமைச்சருடன் அவர்கள் சிரித்துக்கொண்டு செல்ஃபி எடுத்ததை பார்க்கும்போது, இலங்கை மீனவர்களது விடயம் நினைவில் கூட இல்லை என்பது போலதான் எமக்கு தெரிகிறது.
இந்த நிகழ்வுக்கு கடற்றொழில் அமைச்சரின் தலைமையில் தான் இந்த குழு சென்றதாக அறியமுடிகிறது. அதிலும் சிலருக்கு அழைப்பு விடுத்தும், சிலருக்கு அழைப்பு விடுக்காமலும் அந்த நிகழ்வுக்கு சென்றிருந்தனர். அங்கு சென்று கடற்றொழில் அமைச்சர் கூட மீனவர் பிரச்சினை குறித்து பேசியதாக ஊடகங்களில் செய்திகள் எவையும் வெளிவரவில்லை.
எங்களது மக்களின் வளங்களை அழித்தவர்கள்தான் முதலமைச்சர் ஸ்டாலினின் மக்கள். அவருடன் செல்ஃபி எடுக்க துணிந்த நீங்கள், அவரது காதிலாவது ஒருதடவை சொல்லியிருக்கலாமே இலங்கை மீனவர்களது பிரச்சினையை.
சிலவேளை இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் சொல்வதற்கு உங்களுக்கு பயமிருக்கலாம். ஏனெனில் உங்களில் சிலருக்கு இந்தியாவில் வீடுகள், நிலங்கள் இருக்கலாம்.
ஆகையால் பிறகு அங்கு போவது உங்களுக்கு பயமாக அல்லது பிரச்சினையாக இருக்கும். ஆனால் வெளியே வந்து அங்குள்ள ஊடகங்களுக்கு என்றாலும் எமது மீனவர்களது வளங்கள் அழிப்பது குறித்து சொல்லுங்கள். எங்களது மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை சொல்லுங்கள். அதை சொல்லிவிட்டு வாருங்கள் என்றார்.