திருமலையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகன சாரதிகள் : இரவில் மாத்திரம் டீசல் விநியோகிப்பதாக விசனம்

திருகோணமலையில் டீசல் மற்றும் பெட்ரோலுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதால் சாரதிகள் நீண்ட நேரம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து கொள்வனவு செய்வதினால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இருந்த போதிலும் திருகோணமலை நகரில் ஒருசில எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெற்றோல் விநியோகம் செய்யப்படுவதுடன் அவ்வாறு விநியோகிக்கப்படும் எரிபொருள் நிலையங்களில் கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட ரூபாய்க்கு மேல் பெற்றோல் விநியோகிக்கப்படுவதில்லை எனவும் விசனம் தெரிவிக்கின்றனர்

நாட்டில் ஏற்பட்ட கொரோனா சூழ்நிலை காரணமாக அத்தியாவசிய பொருட்கள் உட்பட பல பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் அன்றாட தேவைகளுக்கு கூட பயணிப்பதற்கு எரிபொருள் இல்லாமல் பெரும் அவதியுறுவதாக பொதுமக்கள் கவலை அடைவதாக தெரிவிக்கின்றனர்

இந்த நிலையில்,திருகோணமலை நகர்,நிலாவெளி,சீனக்குடா,கிண்ணியா,முள்ளிப்பொத்தானை மற்றும் கந்தளாய் போன்ற பிரதேசங்களில்பெருமளவு டீசலுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதுடன், தனியார் மற்றும் வரையறுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் நீண்ட தூரம் வரை வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

அத்துடன், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரவு வேளைகளில் மாத்திரம் டீசல் விநியோகம் செய்யப்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது.

மேலும் அவ்வாறு காத்திருந்து வாகனம் ஒன்றிற்கு 2000 ரூபா முதல் 3500 ரூபா வரை மாத்திரம் சில எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படுவதாகவும் இவ்வாறு வழங்க படும் எரிபொருள் குறிப்பிட்ட தூரம் மாத்திரமே பயணிக்க போதுமாக இருப்பதாகவும் இது தமக்கு பாரிய தலையிடியை கொடுப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இன்னும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மிக நீண்ட வரிசையில் காத்து நிற்கின்ற போதிலும், சில மணித்தியாலங்களில் எரிபொருள் முடிவடைந்து விட்டதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிப்பதாகவும் வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு காத்திருந்து எரிபொருள் இல்லை என திரும்பி செல்வதினால் தமது அன்றாட தொழில் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பொது மக்களும் மேலும் கவலை தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *