இலங்கையின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்களை மேம்படுத்துவதற்கு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் இரண்டு உப குழுக்கள் நியமிக்கப்பட்டன.
அதற்கமைய, வியாட்டுத்துறை பற்றிய உப குழுவுக்கு, ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களான சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, ருவன் மாபலகம, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இளைஞர் விவகாரங்கள் பற்றிய உப குழுவுக்கு, ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களான லசித் பாஷண கமகே, தினிந்து சமன் மற்றும் கோசல நுவன் ஜயவீர ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
ஏனைய உறுப்பினர்களுக்கும் தன்னார்வ அடிப்படையில் இந்த உப குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் கடந்த 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதன்முறையாகக் கூடியபோதே இந்த உப குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் இளைஞர் விவகாரங்கள் பிரதி அமைச்சர் எரங்க குணசேகரவும் கலந்துகொண்டார்.
இதன்போது நாடு பூராகவும் காணப்படும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் தொடர்பான சிக்கல்கள் மற்றும் அத்துறையை வலுப்படுத்துவதற்குத் தேவையான முன்மொழிவுகள் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டன.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையக சிறுவர்களின் விளையாட்டுத்துறை தொடர்பான ஆர்வம் மேம்பட்ட நிலையில் இல்லாமை மற்றும் அதனால் அவர்கள் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் போக்கு ஏற்பட்டுள்ளதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அதனால் விளையாட்டுக்கள் மீது சிறுவர்களை ஈடுபடுத்தும் வகையில் விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டம் ஒன்றின் அவசியம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் அமைச்சர் சுனில் குமார கமகே, விளையாட்டுக்கள் இந்நாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் பிரதான காரணியாகும் எனத் தெரிவித்ததுடன், இந்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
விளையாட்டுத்துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து அமைச்சுக்கு எழுத்து மூலமாக அறிவிக்குமாறும், நாட்டின் விளையாட்டு மேம்பாட்டிற்காக, அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன், நாட்டில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் போர்வையில் இடம்பெறும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகக் குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சிறு வயதிலிருந்தே பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை அடையாளம் கண்டு, அந்தத் தகவல்கள் ஒரே தரவுக் கட்டமைப்பில் இல்லாமை குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, அந்தத் தகவல்கள் ஒரு கட்டமைப்பில் இருப்பதன் அவசியத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர் தற்பொழுது தன்னார்வ மென்பொருள் பொறியியலாளர் ஒருவரினால் தகவல்களை சேகரிக்கும் கட்டமைப்பை தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், இளைஞர் விவகாரங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இடம்பெற்றுள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விடயங்களை முன்வைத்தனர். அதற்கமைய, அந்த விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
2022ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடாந்த அறிக்கையை குழுவின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், அந்த அறிக்கையை ஆராய்வதற்குக் காலம் தேவை என்பதால், எதிர்வரும் காலத்தில் அந்த அறிக்கையை மீண்டும் குழுவில் கருத்திற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.