அதிகாரப் பகிர்வுடன் கூடிய கட்டமைப்பு ஒன்றை பரிசீலிக்கத் தயார் என புலிகள் அறிவித்தார்கள்: நானே இதனை பிரேமதாஸவிடம் தெரிவித்தேன் என்கிறார் சி.வீ.கே.

யாழ்ப்பாணம், மார்ச் 04

மாகாண சபை முறைமை என்பது எங்களுடைய சமஷ்டிக் கோரிக்கைக்கோ அல்லது தன்னாட்சிக் கோரிக்கைக்கோ அல்லது தாயகக் கோரிக்கைக்கோ மாற்றீடானது அல்ல. அவ்வாறு நாங்கள் சிந்திக்கவும் இல்லை என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வடக்கு சீ.வீ.கே.சிவஞானம் கருத்துரை ஆற்றிய போதே இதனை அவர் தெரிவித்தார்.

அவர் தமது கருத்துரையில் கூறியதாவது,

இந்தக் கலந்துரையாடலின் தலைப்பு ’13 ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தைப் பலப்படுத்தி அதன் மூலம் மாகாண சபையைப் பாதுகாத்தல்.’ இந்த இரண்டு வார்த்தைகளிலும் மிக முக்கியமான கருத்து இழையோடுவதாக நான் பார்க்கிறேன். அதைப் பலப்படுத்தல் என்பது இப்போது இருக்கிற மாகாண சபை முறைமையினுடைய செயற்பாடுகளில் தேவையான பலவீனங்களை நீக்கி அதைப் பலப்படுத்துவது என்பது ஒரு வாதம். மாகாண சபையைப் பாதுகாத்தல், என்று சொன்னால் அதற்கு ஏதோவொரு ஆபத்து இருக்கின்றது என்பது தெளிவுபடுகிறது. புதிய அரசியல் அமைப்பு மூலமாக மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பதற்கான எத்தனத்திலே அரச இருக்கிறது என்பது தெளிவாகிறது.

1949 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சி வரித்துக் கொண்ட இன்று வரை நிலையாக கடைப்பிடித்து வருகின்ற சமஷ்டிக் கோட்பாட்டின் கொள்கையிலிருந்து நாங்கள் எப்பொழுதும் விலகவில்லை. ஆகவே, அதுதான் எங்களுடைய இலக்கு, இலட்சியம், நோக்கம் என்பதை வலியுறுத்துக் கொண்டு என்னுடைய கருத்தை நான் சொல்ல விரும்புகின்றேன்.

மாகாண சபை முறைமை எந்தக் காலத்திலும் தமிழ்த் தேசிய இனத்தினுடைய அரசியல், அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதாக நாங்கள் மட்டுமல்ல தமிழ்த் தேசியம் சார்ந்த எந்தக் கட்சியும் ஏற்றுக் கொள்ளவில்லை. அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் போன்றவர்கள் அப்பொழுது இந்த இந்திய – இலங்கை ஒப்பந்ததை நிறைவேற்ற முயலுகின்ற ராஜீவ் காந்திக்கு தெளிவாக எழுத்து மூலம் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆகவே, மாகாண சபை முறைமை என்பது எங்களுடைய சமஷ்டிக் கோரிக்கைக்கோ அல்லது தன்னாட்சிக் கோரிக்கைக்கோ அல்லது தாயகக் கோரிக்கைக்கோ மாற்றீடானது அல்ல. அவ்வாறு நாங்கள் சிந்திக்கவும் இல்லை. இந்த இந்திய – இலங்கை ஒப்பந்தம் அதிலே இரண்டு மூன்று விடயங்கள் எங்களுக்கு மிகப் பெரிய சாதகமாக அமைகின்றது. அதிலே பந்தி 1.4 வடக்கு – கிழக்கு தமிழ்த் தேசிய மக்களுடைய தாயகம் என்பதை வரலாற்று ரீதியான தாயகமாக அங்கீரிக்கின்றது. இது ஒரு சர்வதேச இரு தரப்பு ஒப்பந்தம். சர்வதேச சட்ட வலுவானது. அதிலே பந்தி 2.18 அதுதான் முக்கியமானது. மொழி சார்ந்தது. சிங்களம் உத்தியோகபூர்வ மொழியாக இருந்தாலும் தமிழும் ஆங்கிலமும் உத்தியோகபூர்வ மொழி ஆகும் என்ற ஏற்பாடு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பந்தி 2.18 இல் இருக்கிறது.

பலருக்கு அநேகமாகத் தெரியாத விடயம். 1991 ஆம் ஆண்டு பிரேமதாசவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது, அந்த நேரத்திலே விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலம். அவர்கள் அதிலே தலையீடு செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். ஒரு பேச்சுவார்த்தையை உருவாக்க விரும்பினார்கள். அந்த விடயத்திலே தேசியத் தலைவர் அவர்களினுடைய பணிப்புரையிலே நான் பிரேமதாசவை சந்தித்த பொழுது, தேசியத் தலைவர் மூன்று விடயங்கள் சொன்னார்கள். அதைச் சொல்ல விரும்பவில்லை. முக்கியமாக ஒரு விடயத்தை சொல்கிறேன். அரசியல் சம்பந்தமாக அவர் கேட்டால் நான் என்ன சொல்வது என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் எனக்குச் சொன்ன விடயம். அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய கட்டமைப்பு ஒன்றை நாங்கள் பரிசீலிக்கத் தயார் என்று சொல்லச் சொன்னார். இதற்கு பல அர்த்தம் இருக்கின்றது. அதை நான் பிரேமதாச அவர்களுக்குச் சொன்னேன். We are prepred to Consider a structure that would, provide for optimum power sharing இதிலே ஒரு முக்கியமான ஒருவிடயம் இருக்கின்றது. அவர் எந்தக் கட்டமைப்பு என்று சொல்லவில்லை. அதை நாங்கள் ஏற்கிறோம் என்றும் சொல்லவில்லை. நாங்கள் பரிசீலிக்கத் தயார் என்பதுதான்.

ஆகவே இந்தக் கட்டமைப்பு என்பது பெரிய விசயம் இல்லை. மாகாண சபை முறைமையிலே முழுக்க ஒன்றுமே இல்லை என்று சொல்ல முடியாது. அது ஒரு உள்ளூராட்சி மன்றத்துக்கு மேற்பட்டதாகப் பார்த்தோமானால் இலகுவாக அதனுடைய தேவை தெரியும். ஏன் சிங்கள தேசத்திலே அந்த இனவாத கருத்துடையவர்கள் கூட மாகாண சபை முறைமையை பாவிக்கிறார்கள். இன்றும் அவைத் தலைவர்களினுடைய இணையத்தில் நான் இருக்கிறேன். இன்றும் அவர்களைச் சந்திக்கிறேன். அவர்களும் இந்த முறைமை இருக்க வேண்டும் என்றுதான் சொல்கின்றார்கள். ஆளுநர் முறைமை வேண்டாம் என்றுதான் சொல்கிறார்கள்.

ஆக மாகாண சபை முறைமை என்பதை பெரும் அரசியலுக்குள்ளே புகுத்தி, இது தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு என்று சொல்லி அதனாலே நாங்கள் சமஷ்டியை கைவிட்டிட்டோம் என்று சொல்கின்றனர். இது சமஷ்டிக்கு மாற்று அல்ல. சமஷ்டி முறைமையினுடைய அம்சங்கள் சில அங்கே உள்ளடக்கப்பட்டிருக்கின்றது என்பது உண்மை. அதிகாரப் பகிர்வினுடைய சில அம்சங்கள் அதிலே இருக்கின்றது என்பது உண்மை. இல்லை என்று சொல்ல முடியாது. ஆகவே இருக்கின்றதை ஏன் நாம் விட வேண்டும். இல்லாமல் செய்ய வேண்டும் என்றால் அதுக்கு அடுத்தது என்ன? இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருகிறதோ இல்லையோ என்று என்னால் சொல்ல முடியாது. நான் நினைக்கிறேன் வராது என்று. ஒருவேளை வந்தால், அது எங்களுக்கு மிகப் பாதகமாக இருக்கும்.

ஆகவே இருக்கிறதையும் இல்லாமல் செய்ய நாங்கள் முயல்வது தவறாகும். இந்த மாகாண சபை முறைமையை இலாவகமாக வினைத் திறனுடன் செயற்படுத்தக் கூடிய ஆற்றல் இந்த இனத்திற்கு இருக்கிறது. அதை நாங்கள் சில சமயங்களிலே செய்யவில்லை. அதுக்காக முறைமை தவறு என்று சொல்ல முடியாது. இது பாராளுமன்றத்திற்கும் உள்ளூராட்சிக்கும் இடைப்பட்ட ஒரு Intermediary.

நான் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். நாங்கள் கூடி அழுவதற்கு என்றாலும், கூடி பேசுவதற்கு என்றாலும், கூடிக் குறைகளைச் சொல்வதற்கு என்றாலும் ஒரு ஜனநாயகத் தளம் வேண்டும். அந்த ஜனநாயகத் தளம் மாகாண சபை முறைமைதான். அரசியல் அபிலாஷைகளுக்கு மாற்றீடு என்று நாங்கள் சொல்ல வரவில்லை. அரசியலில் இருக்கக்கூடிய தேவைகளை ஓரளவு சில விசயங்களை வெளிக்கொண்டு வரமுடியும். பேச முடியும், பேசிய கட்டமைப்பு. ஆகவே இதனைப் பலபடுத்துவது என்பது வேறு விடயம். பலப்படுத்தலாம், 13 ஐப் பலப்படுத்தலாம். தேவைகள் இருக்கிறது. குறைபாடுகள் இருக்கிறது. அவற்றை நீக்கலாம். முயற்சி செய்யலாம். ஆனால் மாகாண சபை முறைமையை பாதுகாக்க வேண்டும் என்றால் It is a matter for the Parliament and the southern polity.

ஆரம்பத்திலே சமஷ்டி கேட்டபொழுது எங்கள் எல்லாரையும் சேர்த்து ஏளனம் செய்தவர்கள் இருக்கிறார்கள். இன்றைக்கு எல்லாரும் நாங்கள் ஒரு சமஷ்டி முறைமையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதுதான் எங்களுடைய இலக்கு. அதுதான் எங்களுடை நோக்கம். அதுதான் எங்களுடைய அரசியல் எண்ணங்கள். நாங்கள் சரணடையவில்லை, கைவிடவில்லை. அப்படிஇருந்து கொண்டு இந்த இருக்கக்கூடிய 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல் செய்து அதிலுள்ள குறைபாடுகளை நீக்கச் சொல்லி, எங்களுடைய ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

தந்தை செல்வா – பண்டாரநாயக்கா ஒப்பந்தம் 57 இல் தொலைந்ததும், அங்காலையும் எதிர்த்தார்கள். இங்காலையும் எதிர்த்தார்கள். இங்கும் வேண்டாம் என்றார்கள் அங்கும் வேண்டாம் என்றார்கள். கடைசியில் அவ் ஒப்பந்தம் கிழித்து எறியப்பட்டது. இதையேதான் நாங்கள் செய்கிறோமா?

மாகாண சபை முறைமை என்பது இந்த நாட்டினுடைய அதிகாரப் பகிர்வு. ஏனென்றால் இந்திய – இலங்கை ஒப்பந்தமே எங்களுக்காக மட்டும் என்று சொல்லவில்லை. தேசிய நலன் சார்ந்தது என்றுதான் அதிலே இருக்கிறது. அதுக்காகத்தான் அது வந்தது. ஆனபடியால் 13 ஆவது திருத்தம் இருக்க வேண்டும். அதனாலேதான் இந்த மொழி உரிமை அரசியலமைப்புக்குள்ளே கொண்டு வரப்பட்டது. ஆகவே 13 ஆவது திருத்தம் பலப்படுத்தப்பட வேண்டும். மாகாண சபை முறைமை தொடர்ந்து வலியுறுத்தப்பட வேண்டும். பலப்படுத்தப்பட வேண்டும். திருத்தப்பட வேண்டும். மேன்மைப்படுத்தப்பட வேண்டும். அதனூடாக இந்த நாட்டில் முழு நாட்டிற்கும் ஒரு அதிகாரப் பகிர்வினுடைய முதற்படியாக, அதிகாரப் பகிர்வின் ஆரம்பப் புள்ளியாக இருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை தொடர்ந்து வலியுறுத்தி அதற்காக நாங்கள் நிற்கிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *