உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு காரணமான பிரதான சூத்திரதாரி 1990களில் விடுதலைப் புலிகளால் துரதியடிக்கப்பட்டவர் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு பின்புலத்தில் 4 பேர் செயற்பட்டதாகவும் அவர்கள் அனைவரும் சுதந்திரமாக வெளியே நடமாடுவதாகவும் அவர்களின் பெயர் முதற்கொண்ட விடயங்கள் எனக்கு தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார். குறித்த நால்வரும் முஸ்லிம்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரதான சூத்திரதாரி 1990களில் யாழ்ப்பாணத்தில் இருந்ததாகவும், அப்போது அவர் அரசாங்கத்திற்கு தங்களைப் பற்றிய தகவல்களை கூறும் புலனாய்வாளர் என விடுதலைப் புலிகள் சந்தேகம் கொண்ட நிலையில், அவர் யாழ்ப்பாணத்திலிருந்து விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்டதாக தேரர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், அவருக்கும் புலனாய்வாளர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாகவும், குறித்த பிரதான சூத்திரதாரி தான் சஹரானை பயிற்றுவித்தவர் என ஞானசார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் பற்றிய விபரங்களை ஜனாதிபதியிடம் மட்டுமே கூற இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.