பொய் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது – ஆதரவாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்! ஈ.பி.டிபி கோரிக்கை!

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் என்ற அடிப்படையில் சில விடயங்களை எமது மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் செய்திக் குறிப்பொன்றை விடுத்துள்ளார் 

குறித்த செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது – 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, யாழ் நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட 17 உள்ளூராட்சி மன்றங்களிலும் எமது வீணைச் சின்னத்தில் களம் இறங்கியுள்ளது.

அதேவேளை, கடந்த காலங்களில் எமது கட்சியிலிருந்து வெளியேறிய,  வெளியேற்றப்பட்ட சிலர் ஏனைய சில கட்சிகளிலும் சுயேற்சைக் குழுக்கள் சார்பாகவும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர்களாக களம் இறங்கி இருக்கின்றனர்.

அவ்வாறானவர்கள் எமது கட்சியில் இணைந்திருந்து செயற்பட்ட காலத்தில் கட்சியினாலும் எமது செயலாளர் நாயகத்தினாலும் முன்னெடுக்கப்ட்ட மக்கள் நலன்சார் திட்டங்களையும் அபிவிருத்தி திட்டங்களையும் தங்களின் சாதனைகளாக தற்போது மக்கள் மத்தியில் பிரசாரப்படுத்தி வருவதாக எமது ஆதரவாளர்களினால் எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு வருகிறது.

அதைவிட, வலி கிழக்கு பிதேச சபையில் போட்டியிடுகின்ற சுயேட்சைக் குழு ஒன்று, தம்மை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்றும் தந்திரோபாய காரணங்களுக்காக சுயேட்சை அணியாக போட்டியிடுவதாகவும் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதை அறியமுடிகிறது.

இவ்வாறான பிரசாரங்கள் தொடர்பாக எமது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியையும் எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் வேலைத் திட்டங்களை ஆதரித்து அங்கீகரிப்பவர்களும், உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக எமது நடைமுறைச் சாத்தியமான செயற்பாடுளை எதிர்பார்ப்பவர்களும்,  எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போலிகளை கண்டு ஏமாறாமல், 

எமது சின்னமான வீணைச் சின்னத்திற்கு மாத்திரமே வாக்களிக்க வேண்டும் என்பதை வினயமாக அறியத் தருகின்றேன் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *