மஹிந்தவின் அடக்குமுறை ஆட்சியில் கூட தேர்தல் விதிமுறைகள் மீறப்படவில்லை: மணிவண்ணன் சுட்டிக்காட்டு..!

மஹிந்தவின் அடக்குமுறை ஆட்சியில் கூட தற்போது போன்று அப்பட்டமான முறையில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படவில்லை என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

யாழில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தி என கூறிக்கொள்ளும் ஜே.பி.வி யினர் அப்பட்டமான முறையில் தேர்தல் விதிமுறைகளை மீறுகின்றனர். 

யாழ்ப்பாணத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி ஆலயங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். எமக்கு வாக்களித்தாலே உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்குவோம் என பகிரங்கமாக மேடையில் ஜனாதிபதி மக்களை அச்சுறுத்தும் வகையில் கருத்து கூறுகின்றார். 

காரைநகர் பிரதேச சபை செயலர் , சபையின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் தேசிய மக்கள் சக்தியினருக்கு ஆதரவாக பதிவுகள் இடுகின்றார். இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தும் இது வரையில் எந்த நடவடிக்கையும் இல்லை 

ஊழலை ஒழிப்போம், மாற்றத்தை ஏற்படுத்துவோம் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் முந்தைய அடக்குமுறையான ஆட்சியாளரான மஹிந்தவை விட மிக மோசமாக செயற்படுகின்றனர். 

இவர்களின் ஆட்சி விந்தையானது. ஊழலை ஒழிப்போம் , சட்டவிரோத செயலை இல்லாமல் செய்யவோம் என கூறியவர்கள் தற்போது தம்முடன் போலியான நபர்களையும் , சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்களையும் தம்முடன் இணைத்து வைத்து உள்ளார்கள். 

காரைநகர் பிரதேச சபை வேட்பாளர் ஒருவர் அண்மையில் சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது.

எனவே ,மிக மோசமான இந்த ஆட்சியாளர்களை எமது மண்ணில் கால் ஊன்ற மக்கள் அனுமதிக்க கூடாது என உரிமையோடு கேட்கிறோம் என தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *