மலேரியாவிலிருந்து பாதுகாக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் – வைத்தியர் தயானந்தறூபன் வலியுறுத்து

மலேரியாவை இலங்கையில் ஏற்படுத்தி விட கூடாது என்பதற்காக நாங்கள் அற்பணிப்போடு செயற்பட்டு வருகின்றோம். அதற்கு மக்களது ஒத்துழைப்பும் அவசியம் தேவை ஒத்துழைப்பு கிடைக்கின்ற பட்சத்தில் ஆபத்திலிருந்து விடுவித்து கொள்ள முடியும் என முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய மலேரியா தடை இயக்கத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் தயானந்தறூபன் தெரிவித்தார். 

மலேரியா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கை இன்றையதினம் (24.04.2025) புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

மலேரியா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம். அந்தவகையில் நேற்றுமுன்தினம் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் எமது ஊழியர்களால் இரத்ததானம் வழங்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட மலேரியா தடை இயக்கத்தை சேர்ந்த அனைத்து பணியாளர்களும் இணைந்து சிரமதானத்தையும் ,விழிப்புணர்வு நடவடிக்கையையும் முன்னெடுத்திருந்தோம். 

மக்களுக்கு மலேரியா தொடர்பான அறிவை விழிப்பூட்டலை ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கின்றோம். பலருக்கு தெரிந்திருக்கும் ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு அவ்வளவு பரீட்சயமில்லாத ஒரு நோயாக  மலேரியா காணப்படுகின்றது.

ஏனென்றால் 2002 ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையில் மலேரியா நோயினை சுகாதார திணைக்களத்தினரின் கடும் முயற்சியினால் இல்லாது ஒழிக்கப்பட்டிருந்தது. 

உள்நாட்டில் மலேரியா இல்லாத போதும் தற்போது மீண்டும் ஒரு மலேரியா எமது நாட்டிற்குள் வந்துவிடுகின்ற அபாய சூழ்நிலை காணப்படுகின்றது. எவ்வாறெனில் பல நாடுகளில் மலேரியா பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக ஆபிரிக்கா,  இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகள், தென்கிழக்காசிய நாடுகள் பல நாடுகளில் மலேரியா காணப்படுகின்றது. அவ்வாறான நாடுகளிற்கு சென்று வருபவர்கள் மூலம் எமது நாட்டிற்கு மலேரியா வந்தடைகின்றது.

இவ்வாறான நாடுகளிற்கு செல்ல இருப்பவர்கள் முன் கூட்டியே அதற்குரிய தடுப்பு மருந்துகளை பெற்று சென்றால் மலேரியா நோய் ஏற்படாது தடுக்க முடியும். மீண்டும் மலேரியா என்ற ஒரு நோயினை இலங்கையில் ஏற்படுத்தி விட கூடாது என்பதற்காக நாங்கள் அற்பணிப்போடு செயற்பட்டு வருகின்றோம். அதற்கு மக்களது ஒத்துழைப்பும் அவசியம் தேவை . ஒத்துழைப்பு கிடைக்கின்ற பட்சத்தில் ஆபத்திலிருந்து விடுவித்து கொள்ள முடியும் என கூறிக்கொள்கின்றேன்.என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *