தேர்தலின் முடிவுகள் எமக்கு கிடைத்த மாபெரும் வெற்றி:கஜேந்திரகுமார் பெருமிதம்..!

வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தரப்பு ஆட்சி அமைக்க நாம் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் கொள்கை நிலைப்பாட்டுடன் நின்று ஆதரவைக் கொடுக்கப் பின்னிற்கமாட்டோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியப்  பாதையிலிருந்து தமிழ் மக்கள் படிப்படியாக விலகி வருகின்றார்கள் என்று ஒரு செய்தி பரப்பப்பட்டு வந்தது.

இவ்வாறான ஒரு காலச் சூழலில் பிரதேசத்தின் அபிவிருத்தியை முன்னிறுத்திய ஒரு தேர்தலில் மக்கள் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர்.

இதனூடாக வடக்கு, கிழக்கில் தென்னிலங்கை இனவாதிகளுக்கு இடம் கொடுக்கப்படாது என்பதை ஆட்சியாளர்களுக்குத் தமிழ் மக்களால் உணர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ்த் தேசியபப் பரப்பில் பெரும்பாலான பிரதேசங்களில் தமிழ்த் தேசியம் வெற்றி பெற்றுள்ள போதும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையில் பின்தங்கிய போக்கே இருக்கின்றது.

அதேபோன்று தமிழ்த் தேசியப் பேரவைக்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸுக்கும் மக்கள் கொடுத்துள்ள அல்லது கிடைத்த வெற்றியாகவும் இதை நாம் பார்க்கின்றோம்.

தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவது காலச் சூழலுக்குத் தேவையான ஒன்றாகும்.

இதனால் வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தரப்பு ஆட்சி அமைக்க நாம் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் கொள்கை நிலைப்பாட்டுடன் நின்று ஆதரவைக் கொடுக்கப்  பின்னிற்கமாட்டோம்.

குறிப்பாக ஆட்சி அதிகாரக் கதிரைக்கான தேசியமாக – ஒற்றுமையாக இல்லாது தூய்மையான ஆதரவுக்கான அழைப்பாக இருந்தால் அந்த அழைப்புக்குத் தமிழ்த் தேசிய பேரவை ஆதரவு கொடுக்கும்.

மேலும் ஒற்றுமையை வலுப்படுத்தத் தமிழ் அரசியல் பரப்பில் உள்ள பல தரப்பட்டவர்களுடனும் பேசியிருந்தேன். அதற்கான சாதக பெறுபேறும் கிடைத்தது.

அதேநேரம் தமிழரசுக் கட்சியை ஓரங்கட்டும் நிலையும் எம்மிடம் இல்லை. அவர்களுடனும் பேசியே பயணிக்க வேண்டும்.

தவறான பாதையில் மக்கள் வழிநடத்தப்படுவதை உணர்ந்து அதை வெளிப்படுத்தி தேசியத்தின் பாதையில் மக்களைக் கொண்டு செல்ல நாம் வழிவகுத்தோம்.

அதன் ஒரு பகுதியாகவே இம்முறை தமிழ்த் தேசியப் பேரவை என்ற கூட்டின் கீழ் உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் மக்களிடம் சென்றிருந்தோம். அதற்கான அங்கீகாரத்தை மக்கள் தந்துள்ளனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் போக்குக்கு மக்கள் ஒரு பாடத்தைக் கொடுத்தார்கள். அந்தப் பாடத்தின் ஊடான கிடைத்த படிப்பினைகள் தற்போது தமிழ்த் தேசியப் பாதையை மீளவும் உறுதிப்படுத்திக் கொடுத்துள்ளது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *