மாணவியின் மரண விசாரணைகளை சீர்குலைக்க இடம்பெறும் சதிகள்? பிரதமரின் அதிரடி உத்தரவு

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, காவல்துறை விசாரணைக் குழுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

பிரதமர் தலைமையில் நேற்று  நடைபெற்ற சந்திப்பின் போது இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய மாணவியின் பெற்றோரும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் காவல் குழுக்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்ததாகப் பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

அதேநேரம் பாடசாலையிலும், பயிற்சி வகுப்பிலும் குறித்த மாணவிக்கு நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து பாரபட்சமற்ற, துல்லியமான மற்றும் விரைவான விசாரணைகளை நடத்துமாறும் பிரதமர் காவல்துறை விசாரணைக் குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார். 

அதேநேரம், இந்த சம்பவம் பதிவாகியபோது எடுக்கப்பட்ட நடவடிக்கை செயல்திறனானதா என்பது குறித்து கல்வி அமைச்சு, உள்ளக விசாரணையை நடத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். 

அத்துடன், சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் தலையிட வேண்டிய அரசு, நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மிகவும் மோசமான மட்டத்தில் உள்ளதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டார். 

எனவே, அந்த பொறிமுறையை கண்காணித்து அதை நெறிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க, 

சிறுவர் நோய் தொடர்பான வைத்திய நிபுணர் அஸ்வினி பெர்னாண்டோ தலைமையில் 

மூவர் அடங்கிய குழாம் ஒன்றையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய நியமித்துள்ளார். 

இதேவேளை கொட்டாஞ்சேனை மாணவி விவகாரத்தில் நீதியை கிடைக்க விடாமல் செய்யும் நோக்கில் சில தரப்பினர் ஈடுபட்டு வருவதாக யுனைட்டட் ஹியூமன் ரைட்ஸ் என்ற மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் பிரதீபா வர்ணகுலசூரிய குற்றம் சுமத்தியுள்ளார். 

ஊடக சந்திப்பொன்றில் இதனை தெரிவித்த அவர், திட்டமிட்ட வகையில், விசாரணைகளைக் குழப்புவதற்கான சதிகளில் இந்த தரப்பினர் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த விடயத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் கற்பித்த பாடசாலையைச் சேர்ந்த சில ஆசிரியர்கள் 

குறித்த சிறுமி தொடர்பான குற்றச்சாட்டுக்களைப் பொய் என நிரூபிப்பதற்காக WhatsApp குழுவொன்றை அமைத்து செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

இந்த மாணவியின் மரணம் தொடர்பான விசாரணைகள் தமக்குக் கிடைத்துள்ளதாகவும், குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பினருக்கு உதவி செய்யும் வகையில் அந்த WhatsApp குழுவில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்த பிரதீபா வர்ணகுலசூரிய அதற்கான சில ஆதாரங்களையும் முன்வைத்தார். 

குறித்த மாணவியின் தரப்புக்கு அநீதி ஏற்படும் வகையில் தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளை 

முன்னெடுப்பதனை தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதேவேளை, கொட்டாஞ்சேனை மாணவி விடயத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகளிர் அமைப்பினரால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், சிறுவர் துஷ்பிரயோக விடயத்தில் நீதியைப் பெற்றுத் தராத மகளிர் விவகார அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக நேற்று  கையெழுத்து வேட்டையொன்றும் முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *