பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் கடுமையான இராணுவ கண்காணிப்பின் கீழ் உள்ளதாகவும் , நேர மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையால் , ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று வழிபட முடியவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கி இன்னும் உத்தியோகபூர்வ கடிதம் வழங்கப்படாமையால் , எந்நேரமும் ஆலயத்திற்கு செல்வதனை இராணுவத்தினர் தடை விதிக்கலாம் என்ற அச்சம் தமக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினமும் காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரையில் தற்காலிக பாதை ஊடாக சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் கடந்த வியாழக்கிழமை முதல் அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட கடந்த 27ஆம் திகதி அனுமதித்த இராணுவத்தினர் மீண்டும் 28ஆம் திகதி பாதுகாப்பு காரணங்கள் என கூறி ஆலயத்திற்கு செல்ல அனுமதி மறுத்திருந்ததுடன் பின்னர் வியாழக்கிழமை முதல் ஆலயத்திற்கு செல்ல அனுமதி வழங்கியுள்ளனர்.
இதன்படி, ஆலயத்திற்கு மக்கள் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவத்தினரால் உத்தியோகபூர்வ கடிதம் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் உத்தியோகபூர்வ கடிதம் கிடைக்காதமையால் எந்நேரமும் பாதுகாப்பு காரணம் என கூறி ஆலயத்திற்கு செல்ல இராணுவத்தினர் தடை விதிக்கலாம் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடம் காணப்படுவதக்கவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தற்போது திருவிழா காலம் என்பதால், ஆலயத்திற்கு நேர கட்டுப்பாட்டுடன் அனுமதிப்பதனால் , திருவிழாவை சிறப்பாக செய்ய முடியாத நிலை காணப்படுகிறது எனவும் எனவே நேர கட்டுப்பாட்டை முற்றாக தளர்த்தி சுதந்திரமாக இராஜ இராஜேஸ்வரி அம்மனை வழிபட இராணுவத்தினர் அனுமதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர் .