பனை உற்பத்திகளின் ஏற்றுமதி ஊடாக நாட்டுக்கு பெரும் அந்நியச்செலவாணி கிடைக்கின்றது – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!

பனை உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக எமது நாட்டுக்கு பெரும் அந்நியச்செலவாணி கிடைக்கப்பெற்று வருகின்றது என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் இணைந்து நடத்தும், வடக்கு மாகாண பனை எழுச்சி வாரத்தை முன்னிட்டு ‘எங்கள் வாழ்வியலில் பனை’ என்னும் தலைப்பிலான கண்காட்சியை, நல்லூர் முத்திரைச்சந்தியிலுள்ள சங்கிலியன் பூங்காவில் இன்று இடம்பெற்றது.

அதில் கலந்துகொண்டு உற்பத்திப் பொருட்களைப் பார்வையிட்ட பின்னரே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது மாகாணத்தின் – மாவட்டத்தின் சொத்தாகவுள்ள பனை வளத்தைப் பயன்படுத்தி பல்வேறு உற்பத்திப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும். அவர்களின் உற்பத்திக்கு நியாயமான விலை கிடைக்கவேண்டும்.

எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி பொறிமுறையை இலகுவாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இதன் ஊடாக இடைத்தரகர்களை விட உற்பத்தியாளர்களே அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அவர்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.

பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் மிகச் சிறப்பாகச் செயற்படுகின்றன. ஆனால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் அந்தளவுக்கு இல்லை. கடந்த காலங்களில் அவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டிருந்தாலும் அதைப்பயன்படுத்தி அவர்கள் முன்னேறவில்லை.

ஆனால் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் அவ்வாறில்லை. இவ்வாறு சிறப்பாகச் செயற்படுவர்களுக்கு அடுத்துவரும் ஆண்டுகளில் கூடுதலான நிதி ஒதுக்கீட்டை வழங்க முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *