ஜேவிபியினருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது போன்று தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள்! நீதி அமைச்சரிடம் நேரில் கோரிக்கை

ஜேவிபியினருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது போன்று தமிழ் அரசியல் கைதிகளையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு நீதி அமைச்சரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தை தான் காதுகளால் கேட்கவில்லை என்றும் இதயத்தால் கேட்பதாகவும் தெரிவித்த நீதி அமைச்சர், சட்ட கூட்டமைப்பிற்குள் இருந்து இந்த பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில், நீதி அமைச்சருடடான சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் இவ்வாறு கூறியுள்ளார். 

மேலும் தெரிவிக்கையில்

கொழும்பு நீதி அமைச்சின் அலுவலகத்தில், நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் பிரதிநிதிகள், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப உறுப்பினர்களுடன் சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பில், 15 முதல் 30 வருடங்கள் ஸ்ரீலங்கா சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்கள் உறவினர்களின் நீண்டகால சிறைவாசம் காரணமாக  தாங்கள் எதிர்கொண்ட உளவியல், சமூக மற்றும் பொருளாதார சவால்களை கண்ணீருடன் எடுத்துரைத்தனர். 

தங்களின் அன்புக்குரியவர்களை விரைவாக விடுதலை செய்யுமாறு அமைச்சரிடம் கூட்டாக கோரிக்கை விடுத்தனர்.

இலங்கையின் இன முரண்பாடுகளால் உருவான போரின் விளைவுகளான தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில், மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண்பது அவசியமாகும்.

கடந்த காலத்தில், இலங்கை – இந்திய ஒப்பந்தம், விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுக்கள், ஜே.வி.பி.க்கு பொது மன்னிப்பு, மற்றும் போருக்கு பின்னர் 12,000 விடுதலைப் புலிகள் விடுவிக்கப்பட்டமை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டது . 

இந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, பல வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளில் விடுதலையினை மனிதாபிமான ரீதியில் முன்னெடுக்குமாறு குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை முன்வைத்தது.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் ஊடாக கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

நீதி அமைச்சர் ஹர்ஷ நானயக்கார அவர்கள் கோரிக்கைகளை, தான் “காதுகளால் கேட்கவில்லை, இதயத்தால் கேட்கிறேன்” என்று குறிப்பிட்டு,  சட்ட கட்டமைப்பிற்குள் இருந்து இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

அரசியல் கைதிகளின் பொது மன்னிப்பு சார்ந்த விடயங்கள் ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் வருகின்றமையால், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தொடர்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பானது கடந்த ஜனவரி 2025 முதல் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனான எழுத்துமூல கோரிக்கைக்கு அமைவாக இடம்பெற்றது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *