மக்கள் ஏற்காத காற்றாலைத் திட்டத்தை உடன் நிறுத்துக – ரவிகரன் எம்.பி

கடந்த யுத்தகாலத்தில் அரசால் பாதுகாப்புவலயம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்குள், அரசபடைகள் குண்டுவீசி தாக்குதல் மேற்கொண்ட நிலையைப்போல, கடந்தகால அமைச்சரவை அனுமதியளித்த இந்த காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை மன்னார்த்தீவினுள் மேற்கொள்வதற்கு இடமளித்தால் மன்னார்த்தீவின் நிலை மிகமோசமாகப் பாதிக்கப்படும் என மக்கள் அஞ்சுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். 

எனவே மக்கள் ஏற்றுக்கொள்ளாத இத்திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார். 

பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இன்று (07.08.2025) இடம்பெற்ற மன்னார்த்தீவு காற்றாலை மின்னுற்பத்தித் திட்டப் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் காற்றாலை மின்உற்பத்தி திட்டத்தின் மீது மன்னார் மக்களுக்கோ, மன்னாரைச் சார்ந்த பொது அமைப்புக்களுக்கோ எந்த வெறுப்புக்களும் கிடையாது. 

பாதிப்புக்கள் ஏற்படுமென்பதாலேயே மன்னார்தீவினுள் இந்த காற்றாலை மின்னுற்பத்திக் கோபுரங்களை அமைக்கவேண்டாமென மன்னார் மக்களும், பொதுஅமைப்புக்களும் கோருகின்றன. 

இருப்பினும் பாதிப்புக்கள் எவையும் ஏற்படாதென்ற அடிப்படையில் மன்னார்த் தீவில் காற்றாலை மின்உற்பத்திக் கோபுரங்களை அமைப்பதற்கு கடந்தகால அமச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

எனினும் மக்களுக்கு அதன்மீது நம்பிக்கையில்லை. மன்னார்த் தீவினுள் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள் அமைக்கப்பட்டால் பாரிய பாதிப்புக்கள் ஏற்படுமென்பது மக்களுடைய நிலைப்பாடகவிருக்கின்றது.
குறிப்பாக கடந்த யுத்தகாலத்தில் அசாங்கத்தால் பாதுகாப்பு வலயம் என ஒரு பகுதி அறிவிப்புச்செய்யப்படும். அவ்வாறு அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் எமது மக்கள் நம்பி தஞ்சம் புகும்போது, அரசபடைகளால் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு எமது அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இவ்வாறான பல சம்பவங்கள் கடந்தகாலத்தில் இடம்பெற்றன. இவ்வாறான சம்பவங்களால் அரசாங்கங்கள் மீது எமது மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர். 

இதனைப்போலவே மன்னார் தீவில் காற்றாலை மின்உற்பத்தி கோபுரங்கள் அமைப்பதற்கு பாதிப்பில்லையென கடந்த கால அரசாங்கத்தின் அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டாலும், அதன்மீது எமது மக்களுக்கு நம்பிக்கையில்லை. மன்னார்த் தீவில் இத்திட்டத்தை அமுல்படுத்தினால் பாரிய பாதிப்புக்கள் ஏற்படுமென்ற ஐயப்பாடு அந்த மக்களுக்கு இருக்கின்றது. 

இதேவேளை மன்னார்த் தீவில் காற்றாலை மின்உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும்நோக்கில், வாகனங்களில் எடுத்துவரப்பட்ட காற்றாலை மின்உற்பத்திக் கோபுரங்களின் பாகங்கள் தள்ளாடிப்பகுதியில் வைத்து மன்னார் மக்களால் வழிமறிக்கப்பட்டிருந்தது. 

இவ்வாறாக இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு மக்களால் தடுத்துவைக்கப்பட்டிருந்த காற்றாலை மின்உற்பத்திக் கோபுரத்தின் பாகங்கள் பலத்த பொலிஸ்பாதுகாப்புடன், மக்களின் எதிர்ப்பையும்மீறி மன்னார்த் தீவிற்குள் அடாவடித்தனமாக எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. இந்த விடயத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. 

மக்கள் விரும்பாத ஒருதிட்டத்தை ஒருபோதும் அத்துமீறித் திணிக்க முடியாது. அரசு என்பது மக்களுக்காக இருக்கவேண்டுமேதவிர, மக்கள் விருப்பாத ஒன்றை அத்துமீறித் திணிப்தாக இருக்கக்கூடாது. 

எனவே மக்கள் ஏற்றுக்கொள்ளாத இத்திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *