முள்ளியவளை, குஞ்சுக்குளம் வாய்க்கால் சீரமைப்பை -மரபுரீதியாக ஆரம்பித்துவைத்த ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு – முள்ளியவளை கமநலசேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்குளத்தின் வாய்க்கால் சீரமைப்புவேலைகளை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மரபுரீதியாக இன்றையதினம் ஆரம்பித்து வைத்துள்ளார். 

குறித்த குஞ்சுக்குளத்தின் வாய்க்கால் சீரமைப்பிற்கென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்  கோரிக்கைக்கு அமைவாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த வாய்க்காலின் சீரமைப்பு வேலைகள் நாடாளுமன்ற உறுப்பினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. 

குறிப்பாக குஞ்சுக்குளம் வாய்க்கால் கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு இந்த வாய்க்கால் பாதிப்பிற்குட்பட்டிருப்பதால் அருகிலுள்ள குடியிருப்புக்களும் பாதிப்புக்களை எதிர் நோக்கியிருந்தன. 

இந்நிலையில் கடந்த பருவப்பெயர்சி மழைக்காலத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின்போது குறித்த பகுதிக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரடியாகச்சென்று நிலமைகளை ஆராய்ந்ததுடன், குறித்த வாய்க்கால் சீரமைப்புத்  தொடர்பில் கவனஞ் செலுத்துவதாகத் தெரிவித்திருந்தார். 

அதன்பின்னர் இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேசஅபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் குறித்த குஞ்சுக்குளத்தின் வாய்க்காலைச் சீரமைப்புச்செய்யும்படி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தைக் கோரியிருந்தார். 

அதற்கமைய குறித்த வாய்க்காலை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென முள்ளியவளை கமநலசேவைநிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் பேரம்பலம் தயாரூபன் அவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இத்தகையசூழலில் குஞ்சுக்குளம் வாய்க்கால் சீரமைப்பிற்காக ஐந்து மில்லியன்ரூபா நிதி கமநலஅபிவிருத்தித் திணைக்களத்தால் ஒதுக்கப்பட்டுள்ளநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் குறித்த வாய்க்காலின் சீரமைப்பு வேலைகள் மரபுரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *