கல்விச் சீர்திருத்தங்களை மாகாண மட்டத்தில் முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்!

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தங்களுடன் இணைந்து, கல்விக்கான, டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மாகாண மட்டத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுமாறு பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய கல்விச் சீர்திருத்தங்களுடன் இணைந்து, கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்காக அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய பிரதமரின் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள செயலணியினால், தேசிய கல்வி முகாமைத்துவத் தகவல் அமைப்புடன் மாகாணக் கல்வித் தகவல் அமைப்புகளை ஒருங்கிணைப்பது மற்றும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அலரிமாளிகை வளாகத்தில், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரியின் தலைமையில் நேற்று இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது தேசிய கல்வி முகாமைத்துவத் தகவல் அமைப்புடன் மாகாணக் கல்வித் தகவல் அமைப்புகளை ஒருங்கிணைப்பது மற்றும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விசேடமாக ஆராயப்பட்டுள்ளது.

மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிகழ்வில் கலந்துகொண்ட கல்விச் செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்களினால் ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள பாடசாலைகள் மற்றும் மாகாணக் கல்வி அலுவலகங்களில் டிஜிட்டல் தீர்வுகளின் பயன்பாடு குறித்த தரவுகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்த விளக்கக்காட்சிகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதீப் சபுதந்திரி”டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது, மாகாண மட்டத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பது அவசியம். புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெறுவதன் மூலம், கல்விச் செயல்பாடுகளை தேசிய அளவில் மேற்கொள்ளும் தீர்மானங்களை மிகவும் துல்லியமாக நடைமுறைப்படுத்த முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *