திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து, வெளி நாடுகளுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று, ஜனாதிபதி செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பொலிசாருக்கும் போராட்டக்கார்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் விவசாய காணி அபகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
போராட்டத்தின் ஒரு அங்கமாக இன்று காலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்ததுடன் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் இதன்போது முறுகல் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து போராட்டத்தினை கட்டுப்படுத்துவதற்காக கலகத்தடுப்பு பிரிவினரும் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.
போராட்டத்தினை கட்டுப்படுத்துவதற்காக குறித்த பகுதியில் மேலும் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது போராட்டக்காரர்கள் ஐவருக்கு ஜனாதிபதி செயலகப்பிரிவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை பொலிஸார் வழங்கியிருந்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே” முத்துநகரில் வசிக்கும் 351 குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களில் சிலர் இங்கு வருகை தந்துள்ளனர். மக்களின் காணிகள் வலுக்கட்டாயமாக அபகரிக்கக்கப்பக்கப்பட்டு அவை முதலீட்டு நடவடிக்கைகளுக்காக அந்நிய நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அந்த காணிகள் அனைத்தும் குறித்த பகுதியில் உள்ள மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பகுதியாகும்
அவர்கள் அதனையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். எனவே அந்த காணிகளை மீள தமக்க வழங்குமாறு வலியுறுத்திவந்தனர். இந்த விடயம் தொடர்பாக அதிகாரிகள் முதல் அமைச்சுமட்டம் வரை இந்த விடயத்தினை மக்கள் தெரியப்படுத்தினர்.
அதேபோல் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் இந்த மக்கள் எழுத்துமூலம் ஜனாதிபதி செயலகத்திடமும் கோரிக்கையினை முன்வைத்திருந்தனர். பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கூறிய போதிலும்
இதுவரை அந்த மக்களுக்கு தீர்வு வழங்கப்படவில்லை. மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் போது அனைத்து தரப்பினரின் இணக்கப்பாட்டுடனேயே மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ஒரு விடயத்தினை தெரிவித்திருந்தார். அது வரவேற்கத்தக்க விடயம்.
அந்த யோசனை திட்டத்தின் ஊடாக தற்போது மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் பிற்போடப்பட்டுள்ளது.
அது சிறந்த தீர்மானம். ஆனால் மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி விவகாரத்திற்கு தீர்வு காணமுடியுமெனில்
ஏன் முத்துநகர் விவசாய மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை ?” இவ்வாறு தெரிவித்துள்ளார்.