முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததைக் கண்டித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (18) ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் பல கடைகள் இன்று திறந்திருந்தன.
இருப்பினும் இலங்கைத் தமிழ் அரசு கட்சி (ITAK) ஏற்பாடு செய்திருந்த ஹர்த்தாலை ஒட்டி, இரண்டு மாகாணங்களிலும் பல பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருந்தன.
அதேநேரத்தில் ஹர்த்தால் வெற்றி பெற்றதாக ITAK கூறியது.
எனினும் அரசாங்கம் ஹர்த்தால் தோல்வியடைந்துவிட்டதாக குறிப்பிட்டது.
முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய இளைஞனின் சடலம் கடந்த 8 ஆம் திகதி முத்தையன்கட்டு குளத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டது.
முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்களை இராணுவத்தினர் ஆகஸ்ட் 7 ஆம் திகதி முத்தையன்கட்டு முகாமிற்குள் அழைத்துச் சென்றதாகவும், இராணுவத்தினரால் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாகவும்,அதனால் ஒரு இளைஞர் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில், முத்தையன்கட்டு இளைஞன் மரணம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) இந்த ஹர்த்தால் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.