வடக்கில் வளமுள்ள மாவட்டம் முல்லைத்தீவு. ஆனால் வறுமையிலும் இந்த மாவட்டம் முன்னிலையில் இருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் காலத்தில் இந்த நிலைமை நிச்சயம் மாற்றப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தின் ‘முல்கோ’ விற்பனை நிலைய திறப்பு விழா இன்று (29) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் மாவட்டச் செயலராக முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்த போது இங்குள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கு பல மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்திருந்தேன்.
ஆனால் தவறான முகாமைத்துவம் காரணமாக அவை உரியவகையில் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. இது மிகவும் கவலையை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது அவற்றில் சிலவற்றை மீள இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தின் வளங்களை நாங்கள் தவறான முகாமைத்துவமின்றி முழுமையாகப் பயன்படுத்தினால் முன்னுக்கு வரமுடியும். எங்கால் முடியாததென்று எதுவுமில்லை.
எமது மக்களுக்கு தங்களது வருமானம் அதிகரிக்க வேண்டும் என்பதும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
இன்று இந்த முல்கோ திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் விரிவாக்க வேண்டும். தனியாருடன் போட்டியிட வேண்டும். நீங்கள் சிறந்து முன்னேற வேண்டும் என வாழ்த்துகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.