யாழ்ப்பாணம் – குப்பிளான் பகுதியில் நேற்றையதினம் வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்ததால் வீடானது பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த அனர்த்தமானது ஜே/211 கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இதனால் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த 24 மணி நேரத்திற்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும்.
வடமத்திய மாகாணத்திலும் மாத்தளை, மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.









