முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் இடர்பாடுகள் காணப்படுவதாக விவசாயிகள் பலராலும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்துவதிலுள்ள இடர்பாடுகளைக் களைந்து, சந்தைப்படுத்தலை வினைத்திறனாக்குவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கலந்துரையாடலொன்றினை நடாத்தியுள்ளார்.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நேற்றுமுன்தினம் (03) வடமாகாண விவசாயப் பணிப்பாளர் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய மாகாணபிரதி விவசாயப் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட விவசாயப் போதனாசிரியர்கள் ஆகியோருடனே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இவ்வாறு கலந்துரையாடலை நடாத்தியிருந்தார்.
குறித்த சந்திப்பில் தற்போது முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் தமது விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் எதிர்நோக்குகின்ற சவால்கள் தொடர்பில் வடமாகாணப் விவசாயப் பணிப்பாளர் மற்றும் பிரதி மாகாண விவசாப் பணிப்பாளர், விவசாயப் போதனாசிரியர்கள் ஆகியோரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்துகொண்டார். தொடர்ந்து அந்த சவால்களைக் களைந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்துவதை இலகுவாக்குவதுதொடர்பான ஆலோசனைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
அந்தவகையில் இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் பெற்றுக்கொள்ளப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தலை வினைத்திறனாக்குவதுதொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.




