காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து எகிப்தில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த நிலையில், 2023 ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் தலைமையிலான தாக்குதலுக்கு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் இஸ்ரேலியர்கள் நாடு முழுவதும் கூடினர்.
இந்தத் தாக்குதலில் 1,200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக்கைதிகளாக பிடிபட்டனர்.
ஹோலோகாஸ்டுக்குப் பின்னர் யூதர்களுக்கு இது மிகவும் கொடிய நாளாகும்.
( Holocaust என்பது இரண்டாம் உலகப் போரின் போது நாசி ஜெர்மனியினர் சுமார் ஆறு மில்லியன் யூதர்களை மற்றும் பிற சிறுபான்மையினரை அமைப்புசார் முறையில் கொன்று ஒழித்த பெரும் படுகொலையை குறிப்பது)
இதற்கு இஸ்ரேல் பதிலடியாக காசாவில் இராணுவத் தாக்குதலைத் தொடங்கியது.
இரண்டு ஆண்டுத் தாக்குதல்களில் 67,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அந்தப் பிரதேசத்தின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன் புள்ளிவிவரங்கள் ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் நம்பகமானதாகக் காணப்படுகின்றன.
இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் நிறைவு தினத்தை ஒட்டு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
மிகப்பெரிய வலியுடன், இஸ்ரேல் அற்புதமான மீள்தன்மையை காட்டியுள்ளது.
எங்கள் இரத்தவெறி பிடித்த எதிரிகள் எங்களை கடுமையாக தாக்கியுள்ளனர், ஆனால் அவர்கள் எங்களை சிதைக்கவில்லை என்று கூறினார்.
அத்துடன், போரின் அனைத்து இலக்குகளையும் அடைவதாக அவர் சபதம் செய்தார்.
அதன்படி, கடத்தப்பட்ட அனைவரையும் திரும்பப் பெறுதல், ஹமாஸ் ஆட்சியை ஒழித்தல் மற்றும் காசா இனி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்ற வாக்குறுதி.
இதேவேளை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலை நினைவு கூர்ந்த ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், “அந்த இருண்ட நாளின் பயங்கரம் நம் அனைவரின் நினைவுகளிலும் என்றென்றும் பதிந்திருக்கும்” என்று கூறினார்.
அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் உடன்பட வேண்டும் என்றும், இது “இந்த துயரமான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு “வரலாற்று வாய்ப்பு” என்றும் விவரித்தார்.

ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் குடும்பங்களுக்கான நினைவு விழா டெல் அவிவில் நடைபெற்றது.
குடும்பங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இது இஸ்ரேலிய தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பப்பட்டது.
நாடு முழுவதும் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதற்கிடையில், திட்டத்தின் விதிமுறைகளைப் பற்றி விவாதிக்க இஸ்ரேலிய மற்றும் ஹமாஸ் பேச்சுவார்த்தை குழுக்கள் இரண்டாவது நாள் மறைமுக பேச்சுவார்த்தைக்காக ஷார்ம் எல்-ஷேக்கின் எகிப்திய செங்கடல் ரிசார்ட்டில் கூடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




