இஸ்ரேல் அரசாங்கம் பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸுடன் வெள்ளிக்கிழமை (10) ஒரு போர் நிறுத்தத்தை அங்கீகரித்தது.
இது காசாவில் 24 மணி நேரத்திற்குள் தாக்குதல் நடவடிக்கையை நிறுத்தவும் அதன் பின்னர், 72 மணி நேரத்திற்குள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கவும் வழிவகுத்தது.
பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், காசாவில் இரண்டு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்முயற்சியின் கீழ், காசாவில் இருந்து இஸ்ரேலிய படையினர் படிப்படியாக திரும்பப் பெறுவதற்கும் அழைப்பு விடுக்கும் ஒப்பந்தத்தை மத்தியஸ்தர்கள் அறிவித்த சுமார் 24 மணி நேரத்திற்குப் பின்னர், வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேலிய அமைச்சரவை இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.
இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
உயிருடன் இருப்பவர்கள் மற்றும் இறந்தவர்கள் என அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கான கட்டமைப்பை அரசாங்கம் இப்போதுதான் அங்கீகரித்துள்ளது என்றார்.
இந்தப் போர் இஸ்ரேலின் சர்வதேச தனிமைப்படுத்தலை ஆழப்படுத்தியுள்ளதுடன், மத்திய கிழக்கை தலைகீழாக மாற்றியமைத்தது.
அதன்படி, இது ஈரான், ஏமன் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளை ஈர்த்துள்ள ஒரு பிராந்திய மோதலாக உருவெடுத்துள்ளது.
இது அமெரிக்க-இஸ்ரேலிய உறவையும் சோதித்தது.
குறிப்பாக ட்ரம்ப், நெதன்யாகுவுடன் பொறுமை இழந்து ஒரு ஒப்பந்தத்தை எட்ட அழுத்தம் கொடுத்தார்.
இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பின்னர், இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

இது 67,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட இரண்டு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், போரைத் தொடங்கிய கொடிய தாக்குதல்களில் ஹமாஸால் கைப்பற்றப்பட்ட இறுதி பணயக்கைதிகளை திருப்பி அனுப்புவதற்கும் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஒரு முன்னேற்றமாகும்.
இதேவேளை, ஹமாஸின் நாடுகடத்தப்பட்ட காசா தலைவர் கலீல் அல்-ஹய்யா, போர் முடிந்துவிட்டது என்பதற்கான உத்தரவாதங்களை அமெரிக்கா மற்றும் பிற மத்தியஸ்தர்களிடமிருந்து பெற்றதாகக் கூறினார்.
இந்த ஒப்பந்தத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்த 24 மணி நேரத்திற்குள் போர்நிறுத்தம் அமலுக்கு வரும் என்று இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
அந்த 24 மணி நேரத்திற்குப் பின்னர் காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகள் 72 மணி நேரத்திற்குள் விடுவிக்கப்படுவார்கள்.
இருபது இஸ்ரேலிய பணயக்கைதிகள் இன்னும் காசாவில் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
அதே நேரத்தில் 26 பேர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
மேலும் இருவரின் கதி என்னவென்று தெரியவில்லை.
இறந்தவர்களின் உடல்களை மீட்பது உயிருடன் இருப்பவர்களை விடுவிப்பதை விட அதிக நேரம் ஆகலாம் என்று ஹமாஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒப்பந்தம் செயல்பட்டவுடன், உணவு மற்றும் மருத்துவ உதவிகளை ஏற்றிச் செல்லும் லொரிகள் இலட்சக்கணக்கான பொதுமக்களுக்கு உதவ காசாவிற்குள் உள் நுழையும்.




